Monday, March 11, 2013

இலங்கைக்குஎதிரான தீர்மானம்: மனித உரிமை ஆணையத்தில், 21ம்தேதி ஓட்டெடுப்பு!

Monday, March 11, 2013
ஜெனிவா::இலங்கைக்கு எதிராக, சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது, வரும், 21ம் தேதி, ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.

இலங்கையில், 2009ல், ராணுவத்துக்கும்,  புலிகளுக்கும் இடையே, இறுதி கட்ட சண்டை நடந்தது. இதில், புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். ஏராளமான  புலிகள், ராணுவத்திடம் சரணடைந்தனர்.
இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கான, மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும், நல்லிணக்க ஆணைக்குழு, சில பரிந்துரைகளை செய்திருந்தது. இந்த குழு பரிந்துரைகள் மீது, இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக கூறி, கடந்த ஆண்டு, ஜெனிவாவில் உள்ள, சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டு வந்தது.

இதற்கிடையே, இந்த ஆண்டும், மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர, அமெரிக்கா முடிவு செய்தது.சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில், மனித உரிமை ஆணையத்தின், 22வது ஆண்டு கூட்டம் தற்போது நடக்கிறது.இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து, புலிகளின் ஆதரவாளர் கல்லம் மக்ரே என்பவர் தயாரித்துள்ள, "நோ பயர் சோன்' என்ற ஆவணப்படம், கடந்த வாரம், மனித உரிமை ஆணையத்தில், திரையிடப்பட்டது. இதற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

 "இலங்கையில், நடந்த போர் குற்றங்கள் குறித்து, சுதந்திரமான, நம்பத் தகுந்த சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்' என கூறி, மனித உரிமை ஆணையத்தில், நேற்றுமுன்தினம், அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது, வரும் 21ம்தேதி ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.இந்த தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும் என, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான புலிகளின் ஆதரவாளர் கட்சிகள், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.

No comments:

Post a Comment