Friday, March 1, 2013

13 ஆவது திருத்தத்தை சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் பேச்சு நடத்தியே அமுல்படுத்த வேண்டும் - கெஹலிய ரம்புக்வெல்ல!:-வீஸா இன்றி இலங்கைக்குள் நுழைந்து எவரும் விசாரணை நடத்த முடியாது!

Friday, March 01, 2013
இலங்கை::13ஆவது திருத்தத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியே அமுல்படுத்த வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசாது 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த முடியாது. 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஒரு தடவை செய்த தவறை மீண்டும் செய்ய முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது :-

13 ஆவது திருத்தம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கருத்துக் கூறியுள்ளார். இந்தியாவுடன் சுமுகமாக இணைந்து 13 ஆவது திருத்தத்தை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம்.

13 ஆவது திருத்தத்தை சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் பேச்சு நடத்தியே அமுல்படுத்த வேண்டும். சம்பந்தன் அடங்கலான குழு இணங்குமானால் 13 ஆவது திருத்தம் குறித்து தெரிவுக் குழுவில் பேச்சுவார்த்தை நடத்தி அது குறித்து முடிவு எடுக்கலாம். இதனை அமுல்படுத்த பிரதான பங்காளியான த. தே. கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும்.

ஆனால் 13 ஆவது திருத்தம் தங்களுக்கு தேவையில்லை என சுமந்திரன் எம்.பி. சபையில் கூறினார்.

13 ஆவது திருத்தம் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டாலும் அந்த நோக்கம் நிறைவேறவில்லை எனவே 13 திருத்தம் தொடர்பில் ஒரு தடவை செய்த தவறை மீண்டும் செய்ய முடியாது. 13 ஆவது திருத்தம் பலாத்காரமாகவே திணிக்கப்பட்டது.

உறுதிகளை வழங்கி த. தே. கூட்டமைப்பை தெரிவுக் குழுவுக்கு அழைக்க நாம் தயாரில்லை தெரிவுக் குழுவில் அதிகாரப் பகிர்வு குறித்தும் 13 ஆவது திருத்தம் பற்றியும் பேசி முடிவு காண முடியும்.

ஒழுங்குப் பத்திரம் குறித்தே இங்கே தீர்மானிக்கப்படும்.

ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் முன்னெடுத்த தனிநாட்டுக் கோரிக்கையை முன்னெடுக்கிறது.

உலகத் தமிழ் போரத்துடன் இணைந்து செயற்படுகின்றனர்.

வீஸா இன்றி இலங்கைக்குள் நுழைந்து எவரும் விசாரணை நடத்த முடியாது - கெஹலிய ரம்புக்வெல்ல!

வீஸா இன்றி இலங்கைக்கு வந்து எமது நாடு குறித்து விசாரணை நடத்த எந்த நாட்டிற்கும் முடியாது. நாட்டின் இறைமைக்கு மாற்றமாக அவ்வாறு வர இடமளிக்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அரசாங்கத்திடம் சரணடைந்த 75 புலி உறுப்பினர்களை படையினர் பாலியல் சித்திரவதை செய்ததாக மனித உரிமை கண்காணிப்பகம் (ஹியுமன் ரைட்ஸ் வொட்ச்) தெரிவித்துள்ள குற்றஞ்சாட்டினை முற்றாக மறுத்த அவர் இது இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு சோடிக்கப்பட்ட பொய் அறிக்கை எனவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறி விக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் மனித உரிமை பேரவை அமர்வு குறித்தும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் (ஹியுமன் ரைட்ஸ் வொட்ச்) குற்றச்சாட்டுகள் குறித்து வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், சரணடைந்த புலி உறுப்பினர்களை பாலியல் ரீதியில் சித்திரவதை செய்ததாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் இட்டுக்காட்டப்பட்டது. 26 ஆம் திகதி இது தொடர்பான அறிக்கை வெளியிடப் படுமென கூறப்பட்டாலும் மறுநாளே அது வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை எனக்கு 22 ஆம் திகதியே கிடைத்துவிட்டது. அதற்கு முன்னரே இது தயாரிக்கப்பட்டி ருக்கும். இது தொடர்பான ஆதாரங்கள், சாட்சிகள் மற்றும் உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களை நாம் அந்த அமைப்பிடம் கோரினோம். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக வழங்க முடியாது என மறுக்கப்பட்டது.

இவர்கள் தூதரகங்களினூடாக வீஸா பெற்றே வெளிநாடு சென்றிருப்பர். அங்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும். பின்னரே மனித உரிமை கண்காணிப்பகம் அமைப்பிற்கு அறிவித்திருப்பர். இது தொடர்பான ஆதாரங்கள் எங்கே? அரசாங்கத்தை அபகீர்த்திக்குட்படுத்த திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையே இது. இது அறுவறுப்பான செயலாகும்.

இது தவிர இறுதிக்கட்ட யுத்தத்தில் சரணடைந்த ஒரு இலட்சத்து 47 ஆயிரம் பொதுமக்களை நிர்வாணமாக சென்றதாகவும் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவை பொய்க்குற்றச்சாட்டுகளாகும். இவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளோம். நவநீதம் பிள்ளை இலங்கை குறித்து குறைத்து மதிப்பிட்டு பொய்களை அடுக்கி வருகிறார். இதனை மனித உரிமை பேரவை (ஹியுமன் ரைட்ஸ் வொட்ச்) அமர்வில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க வெளிப்படையாக விமர்சித்தி ருந்தார். அவரின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பும் வெளியிட்டார். ஜுலை கலவரத்தின் பின் வெளிநாடுகளுக்குச் சென்ற புலம் பெயர் தமிழ் மக்கள் உலக தமிழ் போரத்துடன் இணைந்து இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர்.

மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முகம்கொடுக்க கடைசி நேரம் வரை காத்திருக்காது உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த முறை இறுதி நேரத்திலே இந்தியா தனது நிலைப்பாட்டை வெளியிட்டது. இம்முறையும் இறுதி நேரத்தில் இந்தியா தனது முடிவை வெளியிடும்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சில விஸா இன்றி இலங்கை சென்று இலங்கை குறித்து விசாரணை நடத்த மீண்டும் மனித உரிமைப் பேரவையில் (ஹியுமன் ரைட்ஸ் வொட்ச்) கூறியுள்ளன. அவ்வாறு வீஸா இன்றி இலங்கை வர எந்த நாட்டுக்கும் முடியாது. அவ்வாறு செய்வது ஒரு நாட்டை ஆக்கிரமிப்பது போன்றதாகும். இதற்கு இடமளிக்க முடியாது. மனித உரிமைப் பேரவையினால் அவ்வாறு வீஸா இன்றி இங்கு வர முடியாது. பாதுகாப்பு சபையினூடாக அவ்வாறு வர அவகாசம் உள்ள போதும் அதிலுள்ள வீட்ரோ அதிகாரமுள்ள நாடுகள் எமக்கு ஆதரவாகவே உள்ளன.

No comments:

Post a Comment