Sunday, February 03, 2013
சென்னை::கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, Ôமுஸ்லிம் அமைப்புகளுடன் சுமூகமாக பேசி தீர்வு கண்டால் பட ரிலீசுக்கு அரசு உதவும் என்று அறிவித்தார். அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலர் ராஜகோபால் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. கமல், அவரது சகோதரர் சந்திரஹாசன், முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. பின்னர் கமல் கூறும் போது, ‘நானும் முஸ்லிம் சகோதரர்களும் பேசி அவர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து இருவரும் அவரவர் தரப்பில் உதவி செய்யும் வகையில் சில காட்சிகளில் ஒலியை நீக்குவதாக சம்மதித்தேன். இந்த மாற்றம் தணிக்கை குழுவுக்கு தெரிவிக்கப்படும். பிறகு சட்டப்படி படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகளை மேற்கொள்வோம். இந்த சிக்கல் தீர்ந்ததற்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்Õ என்றார். தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரஹ்மத்துல்லாஹ் கூறும்போது, ‘ஆட்சேபத்துக்குரிய பகுதிகளை நீக்க கமல் ஒப்புக்கொண்டுள்ளார். இத்துடன் இப்பிரச்னை முடிந்துவிட்டதுÕ என்றார். இதையடுத்து நாளை ஐகோர்ட்டில் அரசு பதில் மனு தாக்கல் செய்கிறது. ஐகோர்ட்டில் உள்ள வழக்கு முடிக்கப்பட்டு, திரைப்பட தணிக்கை துறை நடைமுறைகளும் முடிந்த பிறகு செவ்வாய் அல்லது புதன்கிழமை படம் வெளியாகலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், விஸ்வரூபம் பட பிரச்னை தீர்ந்ததற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment