Friday, February 08, 2013
சென்னை::இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகைக்கு டெசோ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தது. இந்த அமைப்பின் சார்பில் கருப்பு சட்டை அணிந்து வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கருணாநிதி அறிவித்திருந்தார். அதன்படி ஆர்ப்பாட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து ஏராளமான தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு டெசோ அமைப்பின் தலைவரான கருணாநிதி தலைமை தாங்கினார். மு.க.ஸ்டாலின் டெசோ உறுப்பினர்கள் கி.வீரமணி, சுபவீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், திருமாவளவன் எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:-
தமிழர்களின் கலை, கலாசாரம், இலக்கியம், பண்பாடு, மொழி, அனைத்தையும் அழித்திட கங்கணம் கட்டிக் கொண்டு ராஜபக்சே அரசு வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ் இனம் தான் அழிக்கப்படுகிறது. தமிழர்களின் ரத்தம் மழைபோல் தெளிக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல நாம் கண் போல் காத்த அருமை தமிழ் அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்ப் பெயரால் அழைக்கப்பட்ட பல கிராமங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டப்பட்டு வருகிறது. தோல்பூர் துபாபுரா என்றும், பருத்தி துறை பித்ராதோடுவா என்றும், கிளிநொச்சி கிரடிக்கா என்றும் முல்லைத் தீவு முகடூவா என்றும் மாற்றப்பட்டுள்ளது. போருக்கு பிறகு இந்து கோவில்கள், தமிழர்களின் குடியிருப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. நம் நெஞ்சில் ஆழமாக பதிந்த தமிழ்ப் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மொழியின் ஆக்கத்தை மறைக்க இப்படி பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இதே போல் தான் தமிழகத்திலும் திருவரங்கம், ஸ்ரீரங்கம் என்றும், திருவில்லி புத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூர் என்றும், திருப்பெரும்புதூர் ஸ்ரீபெரும்புதூர் என்றும் இங்குள்ள இனப்பகைவர் களால் தமிழ்ப் பகைவர்களால் ஸ்ரீ என்ற வடமொழி புகுத்தப்பட்டது.
அதே போல்தான் சிங்கள இனவெறியர்கள் தமிழ்ப் பெயரை அழித்திட தமிழர்களை அழித்திட முனைந்து வருகிறார்கள். அவனுக்கு பாடம் கற்பிக்கத்தான் தமிழகமே திரண்டிருக்கிறது. இன்றைய தினம் இந்தியாவில் வேறு சில பகுதிகளிலும் போராட்டம் நடக்கிறது. அவர்களையும் நான் வாழ்த்துகிறேன். நன்றி கூறுகிறேன். அவர்களும் எங்களை வாழ்த்தும் பெருங்குணம் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். பிரார்த்திக்கிறேன் என்றால் யாரை? அவர்களைத்தான் பிரார்த்திக்கிறேன்.
இதேபோல் எல்லோரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக போராடி இருந்தால் எப்போதுமே வெற்றி பெற்றிருக்க முடியும். இப்போது ராஜபக்சேவை எதிர்த்து கூட வேண்டிய அவசியம் வந்திருக்காது. ஆனால் அன்று அதை தவற விட்டுவிட்டோம். அந்த ஒற்றுமையை இன உணர்வை பெறும் காலம் தான் வெற்றியை உருவாக்கும் காலம். அதற்கான ஆரம்பம்தான் இந்த போராட்டம். வருகிற மார்ச் 7-ந்தேதி டெல்லியில் டெசோ அமைப்பின் சார்பில் கருத்தரங்கம் நடக்கிறது. அதில் எடுக்கப்படும் முடிவு இந்த போராட்டத்தின் எழுச்சியை ஒட்டி தான் இருக்கும். அனைவரது உணர்வுகளின் வெளிப்பாடாகத்தான் அமையும். நீங்களும் உங்களது ஆக்கத்தையும், ஊக்கத்தையும் அளியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் எம்.பி.க்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் பெரியகருப்பன், சுபதங்க வேலன், பொன்முடி, தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், வட சென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் மேயர் மா.சுப்பிர மணியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேகர் பாபு, செங்கை சிவம், தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா இலக்கிய கலை துணை செயலாளர் பூச்சி முருகன், பகுதி செயலாளர்கள் கே.கே.நகர் தனசேகரன், மகேஷ்குமார், ராமலிங்கம் துரை கபிலன், ம.தமிழரசு, மு.தனசேகரன், இளங்கோவன், திருவள்ளூவர் நகர் தனசேகரன், ஏ.டி.மணி, சுபமுத்துவேல், ஜெ.கருணாநிதி, ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, விஜய் ஆனந்த், பாக்சர் மதன், தாயகம் கவி, நேரு நகர் பாட்சா, வி.பி.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் சிலர் ராஜபக்சே உருவ படத்தை கிழித்து தீ வைத்து எரித்தனர்.

No comments:
Post a Comment