Saturday, February 02, 2013
சென்னை::விஸ்வரூபம் படப் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்க கமல்ஹாசன் இன்று மும்பையில் இருந்து அவசரமாக சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் கூறுகையில், Ôவட மாநிலங்களில் விஸ்வரூபம் படத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறதுÕ என்றார். இன்று பிற்பகல் நடக்கும் அரசு - முஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்தில் கமல் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.100 கோடி செலவில் கமல்ஹாசன் நடித்து தயாரித்து இயக்கியுள்ள படம் ‘விஸ்வரூபம். முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக கூறி சில முஸ்லிம் அமைப்புகள் படத்தை தடை செய்ய அரசிடம் கோரிக்கை வைத்தன. இதையடுத்து படத்துக்கு அரசு தடை விதித்தது.
தடையை நீக்க வேண்டும் என்று கமல் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 4ம் தேதி அரசு பதில் மனு தாக்கல் செய்ய உள்ளது. ‘முஸ்லிம் அமைப்புகளுடன் பேசி கமல் சமரசம் செய்து கொண்டால் படத்தை வெளியிட அரசு உதவி செய்யும்’ என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்நிலையில், மும்பை, டெல்லி உள்பட வட மாநிலங்களில் ‘விஸ்வரூபம்’ படம் நேற்று ரிலீஸ் ஆனது. இதற்காக கடந்த புதன்கிழமை இரவு கமல் மும்பை புறப்பட்டு சென்றார். இதற்கிடையில், ஜெயலலிதாவின் அறிவிப்பை அடுத்து முஸ்லிம் அமைப்புகள் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தன. சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் ராஜகோபால் முன்னிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது.
கமல் தரப்பில் அவரது அண்ணன் சந்திரஹாசன், இயக்குனர் அமீர் பங்கேற்றனர். முஸ்லிம் அமைப்புகள் சார்பில் 15 பிரதிநிதிகள் பங்கேற்பதாக கூறினர். அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் இடம்பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கமல் பங்கேற்க வேண்டும் என்று முஸ்லிம் பிரதிநிதிகள் கூறியதால், பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த தகவல் மும்பையில் உள்ள கமலுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கமல் உடனே சென்னை புறப்பட்டு வருவதாக கூறினார். இன்று காலை 10.15 மணிக்கு மும்பையில் இருந்து கிளம்பிய கமல், பகல் 12 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு நிருபர்களிடம் பேசுகையில், ‘வட மாநிலங்களில் விஸ்வரூபம் படத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது என்று உற்சாகமாக சொன்னார். பின்னர் அவர் தனது அலுவலகத்துக்கு சென்றார்.
நேற்று பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த முஸ்லிம் பிரதிநிதிகள், ‘விஸ்வரூபம்’ படத்தில் குரான் படிப்பது போன்ற காட்சி உள்ளிட்ட இன்னும் பிற காட்சிகளை நீக்க வேண்டும் என்று ஏற்கனவே கமலிடம் தெரிவித்திருப்பதாக கூறினர். இன்று பிற்பகல் நடக்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது என்னென்ன காட்சிகளை நீக்க வேண்டும் என்பது பற்றிய பட்டியலை அவர்கள் கமலிடம் தர உள்ளனர். அதன்படி சில காட்சிகளை நீக்க வேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் சுமூக முடிவு ஏற்பட்டால் ஓரிரு நாளில் படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. கமல் பரபரப்பு பேட்டி மும்பையில் தனியார் டிவி ஒன்றுக்கு கமல் பேட்டி அளிக்கையில், ‘தமிழகத்தில் திரையுலகினர் எனக்கு ஆதரவாக உள்ளனர். என் சொத்து முழுவதையும் முதலீடு செய்து விஸ்வரூபம் எடுத்துள்ளேன். திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்க்க வேண்டும். கலைஞர்கள் மீது கட்டுப்பாடு கூடாது. வட மாநிலங்களில் படத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment