Wednesday, February 06, 2013
புதுடெல்லி::அல்கொய்தாவுக்கு எதிரான தாக்குதலின் போது அமெரிககா ஐ.எஸ்.ஐ. மையங்களை பயன்படுத்தியதாக மன்மோகன்சிங் மகள் கூறியிருக்கிறார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் 3-வது மகள் அம்ரித்சிங். இவர் அமெரிக்க சிவில் லிபர்டி யுனியன் அமைப்பில் மனித உரிமைகள் திட்ட மூத்த சட்ட அதிகாரியாக பணிபுரிகிறார். இவர் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் சட்ட பேராசிரியராக பணிபுரியும் பார்டன் பீபே என்பவரை திருமணம் செய்து கொண்டார். நியூயார்க்கில் கணவருடன் வசிக்கிறார்.
அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.யின் நடவடிக்கைகள் பற்றி அம்ரித்சிங் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நியூயார்க் நகரில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி அல்கொய்தா தீவிரவாதிகள் விமானம் மூலம் இரட்டை கோபுர கட்டிடத்தை தகர்த்தனர். அதன்பிறகு அல்கொய்தா அமைப்பின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு 54 நாடுகள் உதவி செய்தன.
அப்போது சி.ஐ.ஏ. உளவு அமைப்பானது தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை ரகசியமாக பிடித்துச் சென்று விசாரணை நடத்தியது. மொத்தம் பல்வேறு நாடுகளில் 136 நபர்களை சி.ஐ.ஏ. கைது செய்தது. இவர்களை ரகசியமாக சிறை வைக்கவும், விசாரணை நடத்தவும், ஓரிரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லவும். 54 நாடுகள் உதவி செய்தன. அவர்களை சிறை வைப்பதற்கான இடங்களையும் கொடுத்து உதவின.
ரகசியமாக கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரிய நபர்கள் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு எந்தவித சட்டபூர்வமான நடைமுறைகளும் இல்லாமல் மாற்றப்பட்டனர். உள்நாட்டு அதிகாரிகளுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்கா மேற்கொண்ட இத்தகைய நடவடிக்கைகளுக்குகான செலவுகளை அந்நாட்டு அரசு மட்டுமின்றி அதற்கு உதவிய 54 நாடுகளும் ஏற்றுக் கொண்டன. பெரும்பாலானவர்கள் தாய்லாந்து, ரிதுவேனியா, ருமேனியா, போலந்து போன்ற நாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டனர்.
சி.ஐ.ஏ. அமைப்பின் வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு டென்மார்க் உதவிகளை செய்து கொடுத்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளில் இருந்து கைதிகளை காக்க இந்த வெளிநாட்டு அரசுகள் தவறிவிட்டன.
சித்ரவதை மற்றும் ரகசிய காவலின்போது நடைபெற்ற மற்ற குற்றங்கள் போன்றவற்றின் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்களை அமெரிக்கா மீறியுள்ளது. மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அமெரிக்கா செயல்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் கீழ் கராச்சி விசாரணை மையங்கள் செயல்பட்ட போதிலும் அந்த மையங்களை அல்கொய்தாவுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டது. அங்கு தங்க வைக்கப்பட்ட கைதிகளை அமெரிக்க உளவு அதிகாரிகளும், இங்கிலாந்து உளவு அதிகாரிகளும் விசாரித்துள்ளனர்.
இவ்வாறு அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆய்வறிக்கை மொத்தம் 214 பக்கங்கள் இருந்தன.

No comments:
Post a Comment