Sunday, February 24, 2013

மீண்டும் சூடு பிடிக்கிறதா இலங்கை தமிழர் விவகாரம்?.

Sunday, February 24, 2013
சென்னை::இலங்கையில் நடந்த, இறுதிகட்ட போரின் போது நடந்த படுகொலைகள் தொடர்பான பதிவுகள், மீண்டும் தமிழகத்தையும், உலகையும் உலுக்கியுள்ளன. "பிரபாகரனின் மகன் என்ற ஒரு காரணத்திற்காக, 12 வயதான, பாலச்சந்திரனை சுட்டுக் கொன்றது, மன்னிக்க முடியாத போர்குற்றம்' என, முதல்வர் ஜெயலலிதா தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக, இலங்கை வீரர்கள் பங்கேற்பார்கள் என்பதற்காக, ஆசிய தடகள போட்டிகளை ரத்து செய்ததும், அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளன. இலங்கை தமிழர்கள் நலனுக்காக, தமிழக அரசியல் கட்சிகள், ஒன்று திரளும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்வுகள் குறித்தும், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் உள்ளிட்ட, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,க்கள், பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்...

டி.கே.ரங்கராஜன், எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூ.,: பச்சிளங் குழந்தைகள், பெண்களை துன்புறுத்தி கொலை செய்துள்ள, இலங்கையின் வெறித் தனத்தை பார்க்கும் தமிழர்களுக்கு, கடுங்கோபம் வரும். அதனை உணர்ந்துதான், ஆசிய தடகள போட்டியை, சென்னையில் நடத்தத் தடை விதித்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில், இலங்கையுடன், 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, வர்த்தகத்தை செய்து வருகிறோம். இதையெல்லாம் நிறுத்திவிட முடியாது. ஒரு நாட்டின் பிரச்னையை அணுகும்போது, அந்நாட்டுடன் உறவு வைத்திருந்தால் தான், அதன் தவறுகளை கண்டிக்க முடியும். எனவே, ஆசிய தடகள போட்டிக்கு தடை விதித்துள்ளதை, முதல்வர் ஜெயலலிதா மறு பரிசீலனை செய்யவேண்டும்.இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரித்தே ஆகவேண்டும் என, மத்திய அரசை வற்புறுத்த முடியாது. அமெரிக்கா செய்யாத போர்க்குற்றங்கள் இல்லை. அந்நாட்டுக்கு எல்லை நாடுகளே இல்லை. ஆனால், எல்லை நாடுகளுடன் உறவை பேண வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.

சுதர்சன நாச்சியப்பன், எம்.பி., காங்கிரஸ் : தமிழர்களின் பூமிகளை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக, ஈழப் போராட்டம் துவங்கியது. ஆனால், ஏராளமான ஈழ தமிழர்கள், நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்; பலர், அகதிகளாக உள்ளனர். வெளிநாட்டில் உள்ள, ஈழ தமிழர்கள் பலர், அந்நாடுகளின் அகதிகள் அந்தஸ்தில் உள்ளனர். அவர்களுக்கு, அகதிகள் அந்தஸ்து தொடர வேண்டுமானால், இலங்கையில் அமைதி திரும்பக் கூடாது. இதற்காகத் தான், இலங்கையில் பிரச்னைகள் தீராமல் பார்த்துக் கொள்கின்றனர். அதையொட்டித் தான், போர் தொடர்பான ஆவணப் படங்களை, வெளியிட்டுக் கொண்டுள்ளனர். இலங்கை தமிழ் அகதிகளை, மீண்டும் அங்கு குடியமர்த்தி, அவர்களின் சொத்துக்களையும், உரிமையும் மீட்டுத்தருவது முக்கியமான பணி. அதற்கான முயற்சிகளை, மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்கு, தமிழகத்தின் ஆதரவு மிக அவசியம். இலங்கை தமிழர் நலன் என்ற பெயரில் உணர்ச்சி வசப்பட்டு, தமிழகத்தில் செய்யும் ஒவ்வொரு காரியமும், ஈழத் தமிழர்களுக்கு, பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

தம்பிதுரை, எம்.பி., அ.தி.மு.க., : பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் படுகொலை உள்ளிட்ட ஆவணப்படங்கள், இலங்கையின் போர்குற்றங்களுக்கு ஆதாரமாக வெளிவந்துள்ளன. இதனடிப்படையில், மத்திய அரசை செயல்பட வைக்க, நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரை பயன்படுத்துவோம். ஐ.நா., சபையில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும். அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். எவ்வித போர் விதிகளையும் கடைப்பிடிக்காமல், மனிதாபிமானமின்றி அப்பாவி மக்களை கொன்று குவித்த ராஜபக்ஷேவை, போர் குற்றவாளியாக அறிவித்து, சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டனை பெற்றுத் தர, இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு, நல்வாழ்வு திரும்ப வேண்டும் என்பதே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் குறிக்கோள். இதற்காகத் தான், தமிழக சட்டசபையிலும் தீர்மானங்களை நிறைவேற்றினார். இத்தீர்மானங்களை ஏற்று, மத்திய அரசை செயல்பட வைக்கவும், நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

திருச்சி சிவா, எம்.பி., தி.மு.க., : இலங்கையில் போர் குற்றங்கள், அதன் தொடர்ச்சியாக ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வியல் நெருக்கடி, தமிழ் கலாசாரம், பண்பாடு அழிக்கப்படுவது, பெண்களின் கற்பு சூறையாடப்படுவது போன்றவை, தொடர்ந்து நிகழ்கின்றன. இலங்கையின், போர்க்குற்றங்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை, தமிழகத்தில் ஒருமித்த குரலில் ஒலிக்கிறது. இந்த சூழல், 1980களில், தமிழகத்தில் ஏற்பட்ட, ஈழத் தமிழர் ஆதரவைப் போல் உள்ளது. ஐ.நா., சபையில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை, எவ்வித நிபந்தனையும் இல்லாமல், இந்தியா ஆதரிக்க வேண்டும். இதற்கு, மத்திய அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என, அனைவரும் இணைந்து வலியுறுத்த வேண்டும். பார்லிமென்ட் கூட்டத் தொடரில், இதற்கான விவாதத்தைக் கொண்டுவர, தமிழக எம்.பி.,க்கள், "நோட்டீஸ்' கொடுத்துள்ளோம். இதில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், இலங்கை தொடர்பான, இந்தியாவின் அணுகுமுறை குறித்து, உறுதியான முடிவை அறிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment