Wednesday, February 13, 2013

கைதிகள் மனு உச்ச நீதிமன்ற முடிவுக்கு காத்திருப்பு: தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு!

Wednesday, February 13, 2013
சென்னை::கைதிகள் உரிமை அமைப்பு இயக்குனர் பி.புகழேந்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் வழக்கில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் கைதான அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை யை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் தன்னை விடுதலை செய்யக்கோரி அவர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். இதை ஜனாதிபதி நிராகரித்தார்.

இதுபற்றி மத்திய அரசு வெளியில் தெரிவிக்காமல் அப்சல்குருவுக்கு கடந்த 9ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றியது. காலை 8 மணிக்கு திகார் சிறையில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது. சிறை அதிகாரிகள் சட்டப்படி தூக்கு போடும் நேரம், தேதி ஆகியவற்றை முன் கூட்டி தெரிவித்து அதன்பிறகு தான் தூக்கு தண்டனையை நிறைவேற்றவேண்டும். இதை சிறை அதிகாரிகள் பின்பற்ற தவறிவிட்டனர். இது இந்திய அரசியில் சட்டம் பிரிவு 21க்கு எதிரானது.

ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு மீது முடிவு எடுக்காமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதை எதிர்த்து 20க்கும் மேற்பட்ட தூக்கு கைதிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அந்த மனு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியது தவறானது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதில் முடிவு தெரியும் வரை யாருக்கும் தூக்கு தண்டனை விதிக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment