Thursday, February 07, 2013
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மாவுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிக்கும் இடையில் லண்டனில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி நிரலில், இலங்கை விவகாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது குறித்தே இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் போது அமைச்சர் பீரிஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய அமைப்பு தலைவர்களின் உச்சிமாநாட்டை இலங்கையிலிருந்து இடமாற்றுவது தொடர்பான யோசனைகளை கனடா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பொதுநலவாய அமைப்பு அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுநலவாய அமைப்பு அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் உள்ளடக்கப்பட்டுள்ளது குறித்து இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய அமைப்பு உச்சி மாநாட்டை நடத்துவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
பொதுநலவாய அமைப்பு தலைவர்களின் உச்சி மாநாடு கொழும்பிலும், பொதுநலவாய அமைப்பின் மக்கள் மன்றம், இளைஞர் மன்றம் ஆகியவற்றின் மாநாடுகளை அம்பாந்தோட்டையிலும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய அமைப்பை அரசியல் மயமாக்க சில நாடுகள் முயற்சிகளை மேற்கொள்வதாக குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் பீரிஸ் பொதுநலவாய அமைப்பு கட்டமைப்பையும், பொறிமுறையையும் பிற நாடுகளின் உள்ளகப் பிரச்சினைகளுக்குத் தடங்கல் ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்த இடமளிப்பது பொதுநலவாய அமைப்பின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

No comments:
Post a Comment