Friday, February 1, 2013

விஸ்வரூபம் பட விவகாரம் இன்று முத்தரப்பு பேச்சு!

Friday, February 01, 2013
சென்னை::விஸ்வரூபம் படம் தொடர்பாக இன்று சென்னையில் முத்தரப்பு பேச்சு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபா நிருபர்களிடம் கூறியதாவது: எங்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் விஸ்வரூபம் படத்தை தடை செய்ய உத்தரவிட்டு இருந்தார். அடுத்ததாக இருதரப்பினரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இதற்கு முதலில் நாங்கள் நன்றியை தெரிவிக்கிறோம். இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். பேச்சுவார்த்தை குறித்து, எங்களின் 24 அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். எப்போது, எங்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை அரசு தான் தெரிவிக்கும். பேச்சு வார்த்தைக்குபிறகு, எங்களின் முடிவை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியின் பொது செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் நிருபர்களிடம் கூறியதாவது:

முஸ்லிம் தலைவர்களுடன் நடிகர் கமல் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கி சமரசம் கண்டால் படம் வெளியாக அரசு ஒத்துழைக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அதை நாங்கள் வரவேற்கிறோம். முதல்வரின் அறிவுரையை ஏற்று பேச்சுவார்த்தை நடத்தி இஸ்லாத்துக்கு எதிரான காட்சிகளை கமல் நீக்கினால் எங்கள் எதிர்ப்பை கைவிடுவோம். சட்டம் ஒழுங்கை காப்பதில் முதல்வரின் அக்கறையை புரிந்து கொண்டு இது குறித்த விமர்சனங்களை இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும்.

இதற்கு முன் ஏன் போராடவில்லை என்று சிலர் கேட்கின்றனர்? கற்பழிப்பு சம்பவம் டெல்லியில் காலம் காலமாக நடந்து வருகிறது. இப்போது ஏன் போராட்டம் வலுத்துள்ளது. முன்பு தாங்கிக் கொண்டோம். இப்போது தாங்க முடியாததால் எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.

ஆரம்பத்திலே முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி சர்ச்சைக்குரிய காட்சிகளை கமல் நீக்கியிருந்தால் இப்பிரச்னை பெரிதாகி இருக்காது. திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சமாக இருக்க வேண்டும். சாதி, மத அடிப்படையில் மக்கள் மனதை புண்படுத்துவதாக இருக்கக் கூடாது. இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெற்றிருந்தால், அதற்காக போராட வாருங்கள் என எங்களுக்கு அழைப்பு விடுத்தால் அதை ஏற்று நாங்களும் போராட தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பிரச்னை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, இரு தரப்பும் பேச வேண்டும். அதற்கு அரசு உதவ தயார் என்று கூறியிருந்தார். எனினும், அரசு முன்னிலையில் இந்த பேச்சு நடக்க வேண்டும். முத்தரப்பு பேச்சாக இருக்க வேண்டும் என்று அமைப்புகள் விரும்புகின்றன. ஒரு சில முஸ்லிம் அமைப்பு தலைவர்கள் வெளியூரில் உள்ளனர். பேச்சுவார்த்தையில் பங்கேற்க அவர்களும் இன்று சென்னை திரும்புகின்றனர்.

நடிகர் கமலும் மும்பையில் இருந்து இன்று சென்னை திரும்புகிறார். இந்த பேச்சுவார்த்தையில் கமலுடன் திரைப்பட துறையினரும் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்படும் என்று திரைத்துறையினர் நம்புகின்றனர். அப்படி முடிவு ஏற்பட்டால், ஓரிரு நாளில் தமிழ்நாட்டில் படம் வெளியாக வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment