Friday, February 15, 2013

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் மீது இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதல் நடாத்தவில்லை - இராணுவ நீதிமன்றம் அறிவித்துள்ளது!

Friday, February 15, 2013
இலங்கை::இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் மீது இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதல் நடாத்தவில்லை என இராணுவ நீதிமன்றம் அறிவித்துள்ளது.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற பொதுமக்கள் இழப்புக்கள் குறித்து இராணுவ நீதிமன்றம் விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. ஐந்து பேர் அடங்கிய இராணுவ நீதிமன்றம் இந்த விசாரணைகளை நடத்தி அறிகi;க சமர்ப்பித்துள்ளது.

இந்த இராணுவ நீதிமன்றிற்கு மேஜர் ஜெனரல் கிறிசாந்த டி சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜயத் ஜயசூரியவிடம் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.1990ம் ஆண்டு முதலே சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தொடர்பில் படையினருக்கு தெளிவுபடுத்தப்பட்டு வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூச்சிய பொதுமக்கள் இழப்பு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் யுத்தம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய பூச்சிய பொதுமக்கள் இழப்புகள் என்ற அடிப்படையில் யுத்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.யுத்த சூன்ய வலயத்தின் மீது புலிகள் தாக்குதல் நடத்திய தருணங்களில் கூட படையினர் பதில் தாக்குதல்களை நடாத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நிலைகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்ற நிபந்தனையை எறிகணைத் தாக்குதல் நடத்திய படையினர் மிகவும் தீவிரமாக பின்பற்றினர் என அறிவிக்கப்பட்டுள்ளது.யுத்தம் இடம்பெற்ற ஒட்டுமொத்த காலத்திலும் படையினர் மிகவும் ஒழுக்கத்துடன் செயற்பட்டார்கள் என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த  புலி உறுப்பினர்கள் கூட மனிதாபிமான அடிப்படையில் நடாத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும்,  புலிகள் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிச் செயற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக அப்பாவி பொதுமக்களை  புலிகள் மனித கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவ முன்னரங்கப் பகுதிகளுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட பொதுமக்களை புலிகள் கூட்டுப் படுகொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சிறுவர் போராளிகளை பலவந்தமாக படையில் இணைத்துக் கொண்டதாகவும் புலிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச் செயல்களை தடுக்க சர்வதேச சமூகம் தவறியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழக்கவில்லை எனவும்,  புலிகள் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்திருக்கக் கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இராணுவ நீதிமன்றம் இரண்டாம் கட்ட விசாரணைகளை விரைவில் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.செனல்4 ஊடகத்தின் குற்றச் சாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

No comments:

Post a Comment