Saturday, February 9, 2013

கருணை மனு நிராகரித்த 6 நாளில் தூக்கு நிறைவேற்றம்: மத்திய மந்திரி ஷிண்டே தகவல்!:-ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு தூக்கு எப்போது?

Saturday, February 09, 2013
புதுடெல்லி::அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதை மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே உறுதி செய்தார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அப்சல்குருவின் கருணை மனுவை ஜனாதிபதி கடந்த 3-ந்தேதி நிராகரித்தார். இதைத்தொடர்ந்து மறுநாள் 4-ந்தேதி தூக்கிலிடும் உத்தரவில் கையெழுத்திட்டார்.

அப்சல் குருவை தூக்கிலிடுவது குறித்து நேற்று  இறுதி முடிவு செய்யப்பட்டது. இன்று காலை 8 மணி அளவில் அப்சல்குரு திகார் ஜெயிலில் தூக்கிலிடப்பட்டார். கருணை மனு நிராகரிக்கப்பட்ட 6 நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு சுசில்குமார் ஷிண்டே கூறினார். ..

ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு தூக்கு எப்போது?

இந்தியாவின் ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவியேற்றபின்னர் அவர் மூன்று கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். அதில் இரண்டு பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட உடன் தண்டனையை நிறைவேற்றக்கோரி குற்றவாளியின் சார்பில் கருணை மனு அனுப்பிவைக்கப்படும். இதுபோன்ற 8 கருணை மனுக்கள் பிரணாப் முகர்ஜியிடம் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மும்பை தாக்குதல் வழக்கில் கைதான தீவிரவாதி அஜ்மல் கசாப் கருணை மனுவை கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி நிராகரித்தார் இதனை தொடர்ந்து நவம்பர் 21ம் புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

கர்நாடகா குற்றவாளி கர்நாடகாவை சேர்ந்தவர் சைபன்னா நிங்கப்பா என்பவருக்கு தன் மனைவி மற்றும் மகளை கொலை செய்த வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனையை குறைக்கும்படி, ஜனாதிடபதியிடம், நிங்கப்பா சார்பில், கருணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை பரிசீலித்த ஜனாதிபதி, கடந்த ஜனவரி மாதம் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, நிங்கப்பாவுக்கு, தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகியுள்ளது.

அதேபோல் பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல்குருவின் கருணை மனுவை கடந்த ஜனவரி மாத இறுதியில் பிரணாப் முகர்ஜி நிராகரித்து விட்டார்.

இதைத் தொடர்ந்து பெப்ரவரி 9ஆம் திகதி இன்று டெல்லி திகார் சிறையில் அப்சல்குருவிற்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதியாக பதவியேற்றபின், நிராகரிக்கப்பட்ட, மூன்றாவது கருணை மனு, இதுவாகும். இன்னும் 5 கருணை மனுக்கள் ஜனாதிபதி வசம் உள்ளன. அதில் ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனுக்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதீபா பட்டீல் 35 பேருக்கு கருணை இதனிடையே முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தாம் குடியரசுத் தலைவராக பதவி வகித்த 5 ஆண்டுகால பதவி காலத்தில் 35 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்துள்ளார்.

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரிய பிரதீபாவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூலை 24-ந் திகதியுடன் முடிவடைந்தது. இவர் 5 ஆண்டுகளில் தமது பரிசீலனைக்கு வந்த கருணை மனுக்களில் 35 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உள்ளார்.

அதாவது அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இருக்கிறார். இவர்கள் 19 வழக்குகளில் தொடர்புடையவர்கள். அதேசமயம் தமிழகத்தில் ராஜீவ் கொலை வழக்கில் மூவரின் கருணை மனுவை நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

91 பேர் கருணை மனு கடந்த 1981-ம் ஆண்டு முதல் இதுவரை 91 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி கருணை மனு அனுப்பி இருக்கிறார்கள்.

அவர்களில் 31 பேரின் கருணை மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த 31 மனுக்களில் 23 மனுக்கள் பிரதீபா பட்டீலால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை ஆகும்

No comments:

Post a Comment