Tuesday, February 26, 2013

கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை! கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்!! (பகுதி -1):-முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஐப்பெருமாள்!


Tuesday, February 26, 2013
இலங்கை::கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை! கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்!! (பகுதி -1):-முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஐப்பெருமாள்!

சகர வரிசைப் பெயர் கொண்ட தலைவர்கள்

இன்றைய இலங்கைத் தமிழர்களுக்கான தலைமைத் தகுதியை அடைவதற்கு சகர வரிசை எழுத்துக்களில் ஒன்றை அதாவது ஆங்கிலத்தில் எழுதினால் ‘S’ ஐ தமது பெயரின் முதலெழுத்தாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற வகையாக எண் சாஸ்த்திரத்தின் (ஆங்கிலத்தில் Numerology) ஒரு பகுதியாக அண்மைக் காலத்தில் சில சாஸ்த்திர வியாபாரிகளால் பிரபல்யப்படுத்தப்பட்டிருக்கும் 'பெயரியல்' (ஆங்கிலத்தில் ' Numerology') எனும் சாஸ்த்திரம் நிர்ணயிக்கிறது எனக் கொள்ளலாமா என்ற கேள்வி எழுகிறது.

அந்தவகையில் சங்கரியார், சம்பந்தர், சேனாதிராஜா, சித்தார்த்தர், சிறிதரன் (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்.), சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், சரவணபவன், சிறீதரன் (கிளிநொச்சி), சிவாஜிலிங்கம், சிறீகாந்தா, பேராசிரியர் சிற்றம்பலம், பேராசியர் சிவச்சந்திரன் மற்றும் சி.வி.கே.சிவஞானம் என சகர வரிசை எழுத்தொன்றை தமது பெயரின் முதலெழுத்தாகக் கொண்டவர்களே இன்று இலங்கைத் தமிழர்களின் அரசியலில் பிரபல்யமானவர்களாக உள்ளனர். திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த திரு தண்டாயுதபாணி அவர்கள் கிழக்கு மாகாண சபைக்கான எதிர்க்கட்சித் தலைவராக இருந்தப்பட்டிருந்தாலும் இங்கு சம்பந்தருக்கு அடுத்த வாரிசுகளின் வரிசையில் (திருமலை) சுந்தா மற்றும் சிறீஸ்கந்தராஜாவே உள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு செல்வராசா அவர்களே அங்கு தமிழ்த் தேசிய அரசியலின் முன்னணித் தலைவராக இருக்கிறார். அதேபோல அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சியில் திரு சந்திரகாந்தன் அவர்களே முன்னிலை வகிக்கிறார்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் சம்பந்தர், சேனாதிராஜா, சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், அடைக்கலம் செல்வநாதன், சரவணபவன் மற்றும் கிளிநொச்சி சிறீதரன் ஆகிய ஏழு பேருமே இன்று;

1) இலங்கைத் தமிழர்களின் இனவாரியான அரசியல் அபிலாஷைகளையும், அந்த அபிலாஷைகளை திருப்தி செய்யும் வகையாக அரசை நோக்கி முன்வைக்க வேண்டிய கோரிக்கைகளையும் நிர்ணயிக்கின்றனர்,

2) அந்தக் கோரிக்கைகளை வென்றடைவதற்கான அரசியற் போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பான கால, சூழல், வர்த்தமானங்களையும், வழி முறைகளையும் அவற்றுக்கான அணுகுமுறைகளையும் தீர்மானிக்கின்றனர்,

3) அவற்றுக்காக இலங்கைத் தமிழர்களை அணிதிரட்டித் தலைமை தாங்கி வழி நடத்துபவர்களாகவும்,

4) அவ்வப்போது இலங்கைத் தமிழர்களின் அரசியல் நண்பர்கள் யார் யார்? எதிரிகள் யார் யார்? என்பதை முடிவு செய்கிறார்கள்.

1977ம் அண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஒப்பீட்டுரீதியில் ஒரு சுதந்திரமான சூழலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் 2010ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பின்னர் நடந்த தேர்தல்களே. இலங்கைத் தமிழர்களிற் பெரும்பான்மையினர் த.தே.கூவினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க 2010ம்ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் புலிகளைக் கூண்டோடு அழித்த அரச இராணுவத்துக்குத் தலைமை தாங்கிய முன்னாள் தளபதி திரு சரத் பொன்சேகா அவர்களுக்கு வாக்களித்தது மட்டுமல்லாது, தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கே அடுத்தடுத்து கடந்த தேர்தல்களில் வாக்களித்து வருகின்றமையானது த.தே.கூவின் தலைமைக் தமிழ்மக்கள் சட்டநியாய பூர்வமாக வழங்கி வரும் அரசியல் அங்கீகாரத்தையே உறுதிப்படுகின்றது.

சட்டபூர்வமாகப் பார்த்தால் இந்த ஏழு பேரும் தமிழரசுக் கட்சியின் பெயரிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களாக மக்களால் ஆக்கப்பட்டு உள்ளனர். தமிழரசுக் கட்சியின் தார்மீகத் தலைவர் திரு. சம்பந்தர் அவர்களே, அந்தக் கட்சியின் சார்பாக அனைத்துத் தேர்தல் விடயங்களிலும் சட்டபூர்வமாகக் கையெழுத்திடும் பொதுச் செயலாளர் அதிகாரம் திரு. சேனாதிராஜா அவர்களிடமே உள்ளது. இவர்கள் வாழும் காலம் வரை இந்த நிலைகளில் எந்தவித மாற்றமும் நிகழ மாட்டாது என்பது வெளிப்படை. எந்தவித மாற்றமும் நிகழ்ந்துவிடக்கூடாது என்றே யாழ்ப்பாணத் தமிழரசுக் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் விரும்புகின்றனர்.

மேற்குறிப்பிட்ட ஏழு பேரும் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டமை தமிழரசுக் கட்சியின் பெயர் மற்றும் அதன் வீட்டுச் சின்னத்திற்கு ஊடாகவே. எனினும் இவர்கள் உலக நடப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயருடனே வலம் வருகின்றனர்.

புலிகள் படைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்ட போது அது முதலில் சம்பிரதாய பூர்வமாக

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF),

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் (ACTC),

செல்வம் அடைக்கலநாதனின் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO),

சுரேஸின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) ஆகியன இணைக்கப்பட்டன.

புலிகள் தாங்களே தமிழர்களின் தனிப்பிரதிநிதிகள் - மேலும் பிரபாகரனே தமிழர்களின் தனிப்பெரும் தேசியத் தலைவர் - எனவே இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக புலிகளுடன் மட்டுமே அரசாங்கமாயினும் சரி வெளிநாடுகளாயினும் சரி உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பனவற்றை நிலை நாட்டவும், புலிகளின் அந்த இலக்கை உலகத்துக்கு சட்டபூர்வமான ஓர் அரசியல் நிறுவனத்தின் ஊடாக பிரச்சாரம் செய்யவுமே தமிழ்த தேசியக் கூட்டமைப்பை புலிகள் படைத்தனர்.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் அல்-கெய்தா பயங்கரவாதிகளால் விமானங்கள் கொண்டு தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச ரீதியில் ஏற்பட்ட மாற்றங்களால் புலிகள் அடுத்தடுத்து மேலைத்தேய நாடுகளால் பயங்கரவாத இயக்கம் எனப் பிரகடனம் செய்யப்பட்டன. இதனால் புலிகளின் பல பில்லியன் கணக்கிலான சர்வதேச நிதி இருப்புக்கள் முடக்கப்பட்டன. அவர்களின் தொடர்நிதி திரட்டல்கள் சர்வதேசரீதியில் வௌ;வேறு வகைப்பட்ட தடைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு உள்ளாயின.

இந்தியாவின் உதவிகளைப் பெற்று இலங்கை அரசை புலிகள் எதிர்த்து, பின்னர் இலங்கை அரசின் உதவிகளைப் பெற்று இந்தியப் படைகளை புலிகள் எதிர்த்தது மட்டுமல்லாது, இந்திய - இலங்கை சமாதான உடன்பாட்டின் மூலம் வராது வந்த மாமணி போல் கிடைத்த வடக்கு-கிழக்கு மாகாண சபையையும் புலிகள் இல்லாதொழித்து, அதன் பின்னர், எந்தவொரு சிங்களத் தலைவரும் தானாகச் செய்திருக்க மாட்டார்கள் என்ற வகையான ஓர் அரசியற் தீர்வை சந்திரிகா குமாரதுங்கா அவர்கள் தானாக முன்வந்து ஏறத்தாழ அதிகபட்சமான மாநில சுயாட்சி அதிகாரங்கள் கூடிய அரசியற் தீர்வை முன் வைத்த போதும் அதனை நடைமுறைக்கு வராது பண்ணிய புலிகள், பல சர்வதேச மேலைத்தேய நாடுகள் இந்திய அரசினது மறைமுக அங்கீகாரத்தையும் பெற்று ரணில் விக்கிரமசிங்காவை சமஷ்டி அரசியற் தீர்வுக்கு ஒப்புக்கொள்ள வைத்த போதும் அதனையும் ஏற்க மறுத்து சண்டையைத் தொடர்ந்த புலிகள்

கடைசியில் எந்த நாடும் தமது பயன்பாட்டுக்கு துணை தராமற் போய்விடுமோ என்ற நிலையைப் புரிந்து கொண்டதால் மீண்டும் தமிழ் மக்களின் வாக்குகளைத் தஞ்சமாகக் கொண்டனர். அதனால் தம்மைக் காப்பாற்றும் ஆயுதமாகத் தமிழ் மக்களின் வாக்குரிமைகளைப் பயன்படுத்தினர். அதற்கான ஏஜண்டுக் குரல்களாகச் செயற்பட சட்டபூர்வமாக இருந்த சில தமிழ்க் கட்சிகளை வளைத்துப் போட்டனர். அதன் விளைவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் என்பதை அனைவரும் அறிவர்.

புலிகள் இந்தத் தமிழ்க் கட்சிகளைப் பயன்படுத்திக் கொண்டார்களா? அல்லது இந்தத் தமிழ்க் கட்சிகள் புலிகளின் அரசியல் அறியாமையைப் புரிந்து கொண்டு – புலிகளின் அரசியல் அறிவுப் பலயீனத்தை நன்கு அறிந்து கொண்டு தற்காலிகமாக தத்தமது சொந்த சுயநல அரசியல் லாபங்களை அடைந்து கொள்வதற்காக பிரபாகரனின் காலில் விழுவது போல் விழுந்து புலிகளைப் பயன்படுத்திக் கொண்டார்களா? என்ற விடைகளைக் காண முற்படுவது நீண்ட ஆய்வுக்குரியதொரு விடயம். எவ்வாறாயினும் புலிகளே த.தே.கூவைப் படைத்தார்கள் என்னும்வரலாற்று உண்மையில் எவருக்கும் மறுப்பிருக்க முடியாது.

புலிகள் தமது ஏக பிடியை – கட்டுப்பாட்டை த.தே.கூ மீது வைத்திருப்பதற்காக அடிக்கடி தமிழ்த் தேசியக் கட்சிகளின் கைகளைக் கொண்டே அதில் அரசியற் 'களையெடுப்பு' களையும் மேற்கொண்டன. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பெயர் மற்றும் சின்னத்தின் மீது சட்டரீதியான பிடிமானங்களைக் கொண்டிருந்த சங்கரியார் புலிகளின் எஜமானத்தனத்துக்கு ஒத்துழைக்காமல் கிளர்ச்சி செய்தமையினால் அவரை திட்டமிட்டு ஒதுக்கிய புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பகிரங்கத்தில் ஒட்டியாலும் சட்டரீதியாகத் தவிர்க்க முடியாமல் தமிழரசுக் கட்சியின் பெயரையும் அதன் சின்னத்தையும் தமது நலனுக்காக 2004ம் ஆண்டுத் தேர்தலின் போது அரசியல் அரங்கத்தில் நிறுத்தினார்கள்.

இன்று தமிழரசுக் கட்சியின் பெயரும் அதன் வீட்டுச் சின்னமும் பெரும்பான்மையான இலங்கைத் தமிழர்களைச் சட்டநியாயபூர்வமாகப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியற் கட்சியாகவும் சின்னமாகவும் ஆகிவிட்டது. தமிழரசுக் கட்சியானது பெரியவர் திரு. செல்வநாயகம், நாவல்லர் திரு அமிர்தலிங்கம் போன்றோரால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. அது மட்டுமல்லாமல்,

அது இலங்கைத் தமிழர்கள் பெரும்பான்மையினரின் அரசியல் ஆதரவை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயக பூர்வமாகப் பெற்றிருந்த கட்சியென்பதனாலும் இப்போது தமிழரசுக் கட்சியானது தமிழர்களுக்கான உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடும் நீண்ட பாரம்பரியம் கொண்டது என்ற கருத்தோட்டத்தின் செல்வாக்கையும் தமிழர்கள் மத்தியில் மீண்டும் பெற்றுவிட்டது.

(தொடரும்.....) முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஐப்பெருமாள்!

No comments:

Post a Comment