Wednesday, January 9, 2013

துரோகி என்ற கௌரவப் பட்டம் நீக்கப்பட்டு நிம்மதியாக இறக்க வேண்டும்! வன்னியில் இடம்பெற்ற மரணங்களுக்கு (TNA) பொறுப்புக்கூற வேண்டும் - வீ.ஆனந்தசங்கரி!

Wednesday, January 09, 2013
இலங்கை::தமிழரசுக் கட்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் தவறுகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ந்தும் பங்கேற்க முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் சபை கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் இன்றைய நிலைமை முன்பொருபோதும் இல்லாதவாறு மோசமடைந்து வருவதாக தெரிவித்துள்ள ஆனந்தசங்கரி, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக செயற்படும் நோக்கம் தமக்கில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

1983ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டபோது தன்னுடன் சம்பந்தன் உள்ளிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளைத் துறந்ததாக தெரிவித்துள்ள வீ.ஆனந்தசங்கரி இந்த பாரம்பரியத்தை ஏன் இன்று சம்பந்தன் கடைப்பிடிக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அப்பாவி மக்களை  புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தக்கூடாது என சர்வதேசம் வேண்டி நின்ற வேளையில் அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் மௌனம் சாதித்ததாகவும் யுத்த காலத்தில் வன்னியில் இடம்பெற்ற மரணங்களுக்கு அவர்களே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தன் மூலமாகவோ வேறு ஒருவர் மூலமாகவோ சிறுபான்மையினருக்கு ஏற்புடைய ஒரு தீர்வைக் காண்பதே பிரதானமானது எனவும் துரோகி என தனக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவப் பட்டம் நீக்கப்பட்டு நிம்மதியாக இறக்க வேண்டும் என்பதே தனது அவா எனவும் வீ. ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதய சுத்தியுடன் உண்மையைப் பேசி உழைப்பதற்கான முழு ஒற்றுமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தொடர்ந்தும் வழங்க தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராகவுள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment