Friday, January 11, 2013
இலங்கை::மூதூரைச் சேர்ந்த பணிப்பெண்ணான ரிசானா நபீக்கின் மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றமை தொடர்பில், சவுதி அரசாங்கம் தங்களுக்கு எந்த முன்னறிவிப்புகளையும் விடுத்திருக்கவில்லை என்று, சவுதியில் உள்ள இலங்கை தூதுவர் அஹமட் ஏ. ஜவாட் தெரிவித்துள்ளார்.
ஏசியன் ட்ரிபியுன் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக ரிசானா நபீக்குடன் தொடர்பு கொள்ள சிரமாக இருந்ததாகவும், சவுதி அதிகாரிகள் மிகவும் இறுக்கமாக நடந்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஏழாம் திகதி தாம் சவுதியில் ரியாட் நகரில் உள்ள பொது உரிமைகள் ஆணையாளருடன் தொடர்பு கொண்டு இதன் போது கலந்துரையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் போது, ரிசானா நபகீக்கினால் உயிரிழந்தாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை மீண்டும் ஒருமுறை சந்திப்பதற்கு தாம் அழைத்த போதும், அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை என்று மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமது குழந்தை இறந்த துக்கத்தில் இருந்து தமது மனைவி இன்னும் மீளவில்லை எனவும், இந்த நிலையில் ரிசானா நபீக்கிற்கு மன்னிப்பு வழங்கும் எண்ணம் தமது மனைவிக்கு இல்லை என்றும் குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக ரிசானா நபீக்கை இறுதி வரையில் காப்பாற்ற முடியாமல் போனது என்றும் சவுதியில் உள்ள இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் ஜனாசாவை இலங்கைக்கு கொண்டு வர முடியுமா என்று சவுதிக்கான இலங்கை தூதுவரிடம் கேட்கப்பட்டது.
சவுதியின் சட்ட விதிகளின் படி இது சாத்தியமற்றது என்றும், சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட உடனேயே அவர்களது ஜனாசா அங்கேயே அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 இலங்கையருக்கும் இதேநிலையே ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:
Post a Comment