Sunday, January 13, 2013

மீண்டும் இருண்ட யுகத்திற்குச் செல்ல தயாரில்லை. அப்துல் கலாம் சொன்னதைப்போல் கண்களைத் திறந்துகொண்டு கனவு காணவேண்டும். இளையவர்கள் சுயநல அரசியல்வாதிகளின் வலையில் விழக்கூடாது. யுவதிகள் இராணுவத்தில் மட்டுமன்றி பொலிஸ் அரசியல் என்றும் இணைய வேண்டும் - கீதாஞ்சலி!

Sunday, January 13, 2013
இலங்கை::ஒரு காலத்தில் மண்ணுக்காக என்ற மாயைக்குள் வீழ்ந்து தமிழ்ப்பெண்கள் ஆயுதம் ஏந்தினார்கள். இன்று வயிற்றுக்காக ஏந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்களை வாய் கூசாமல் பழி சொல்வதற்கு எவருக்கும் அருகதை கிடையாது”

உணர்ச்சி மேலிட நியாயமான கோபம் கொப்பளிக்க படபடவெனப் பேசுகிறார் கீதாஞ்சலி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் என்ற ரீதியில் ஆற்றும் பணிகளைவிடப் பெண்கள் மீதான கரிசனை அதிகம் என்கிறார்.

“இராணுவத்தில் சேர்ந்த பெண்கள் பாய்விரிக்க செல்லவில்லை. இராணுவ நிர்வாகப் பொறிமுறையில் தொழில் நிமித்தமே இணைத்திருக்கிறார்கள். அதனை வைத்து எமது பெண்களின் கெளரவத்தை சிலர் மலிவான விலைக்கு விற்கிறார்கள். இது கண்டிக்கப்பட வேண்டும்; நிறுத்தப்பட வேண்டும்”

நிறுத்தாமல் சொல்கிறார் கீதா!

“வட மாகாணத்தில் 60 வீதமானவர்கள் பெண்களாக இருக்கிறார்கள். இவர்களைப் பற்றிப் பேசுவதற்கு எவரும் இல்லை. பெண்களின் தலைமைத்துவம் கூடி வருகிறது அதே நேரத்தில் 476 பெண்கள் இதுவரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இதற்கெல்லாம் ஏன் அரசியல்வாதிகள் மெளனம் காக்கிறார்கள்?”

“அது சரி வடக்கில் யுத்தத்திற்குப் பின்னர் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அப்படியிருக்க ஏன் பெண்களை சேர்த்திருக்கிறார்கள்?”

“இராணுவ நிர்வாகச் செயற்பாடுகளுக்கான வெற்றிடத்தையே நிரப்பியிருக்கிறார்கள். பெண்களைச் சேர்த்தார்கள் என்பதைவிட சேர்ந்தார்கள் என்பதுதான் பொருத்தமானது. இந்தப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவே வடமாகாணப் பெண்கள் பேரவை உருவாக்கம் பெற்றிருக்கிறது” என்கிறார் நம்பிக்கையுடன்.

“பெண்கள் பேரவை ஊடாக என்னென்ன நடவடிக்கைகளை முன்னெடுக்கிaர்கள்?”

“எமது அமைப்பில் சுமார் 12 ஆயிரம் பெண்கள் இணைந்திருக்கிறார்கள். உதவிகளை வழங்குமாறு எத்தனையோ தடவை வேண்டுகோள் விடுத்திருந்தோம். எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும் ஏரெடுத்தும் பார்க்கவில்லை. அரசியல் இன, மத, பேதங்களுக்கு அப்பால் சகல தரப்பு பெண்களும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். பெண்கள் இராணுவத்தில் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் மிளிர வேண்டும்”

“வடபகுதியில் நீங்கள் உங்கள் செயற்பாடுகளை ஆரம்பித்தபோது இருந்த நிலைமையைவிடத் தற்போது வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறதா?”

நிறைய மாற்றமடைந்திருக்கிறது. உட்கட்டமைப்பு வளங்கள் பெருகியுள்ளன. முகாம்கள் இருந்தாலும் அங்கு இராணுவத்தினர் இல்லை. இதனை விழிப்புணர்வுடன் நோக்க வேண்டும். பந்தி பகிர்பவன் எங்களவனாக இருந்தால் அடிப்பந்தி என்ன, நுனிப்பந்தி என்ன? இன்று அரசியல் கதைப்பவர்களுடைய குடும்பங்கள் வெளிநாடுகளில் உள்ளன. ஆகவே, தற்கால நிலைமைபற்றி விமர்சிப்பதற்கு அவர்களுக்குத் தகுதியில்லை.

“நீங்கள் எதனை அரசியல் என்கிaர்கள்?”

“இன்று நாம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இன்னும் எவ்வளவு காலத்திற்கு நாங்கள் யாசகம் புரிவது? தமிழினம் தன்மானம் இல்லாத சனம் அல்ல. பல்கலை மாணவர்களை உசுப்பேற்றிவிட்டு அரசியல் செய்கிறார்கள். குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இளைஞர்களைப் பயன்படுத்துவதையே கண்டிக்கிறேன். தற்போது இளையவர்களையன்றி முதியவகைளையே திருத்த வேண்டும்.

இனிச் சத்தியாக்கிரகம் எதற்கு? மீண்டும் இருண்ட யுகத்திற்குச் செல்ல தயாரில்லை. அப்துல் கலாம் சொன்னதைப்போல் கண்களைத் திறந்துகொண்டு கனவு காணவேண்டும். இளையவர்கள் சுயநல அரசியல்வாதிகளின் வலையில் விழக்கூடாது. யுவதிகள் இராணுவத்தில் மட்டுமன்றி பொலிஸ் அரசியல் என்றும் இணைய வேண்டும்” என்றவர்,

“புதிய சமுதாயம் புதியதை விரும்புகிறது. அதுபோல் முன்பள்ளிச் சேவையில் 500 பேரை சேர்த்து அவர்களுக்கு மாதாந்தம் ஐயாயிரம் ரூபாவை ஊதியமாகப் பெற்றுக்கொடுக்கிறோம். இதற்கு சிவில் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகம் தம்மிக பீரிஸ் தலைமையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த முன்பள்ளித் திட்டத்தை மன்னாரிலும் வவுனியாவிலும் அமுல்படுத்தவுள்ளோம்.

வடக்கு அபிவிருத்திக்கு தமிழ் அரசியல்வாதிகளைவிட ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ எம்.பி கூடுதல் அக்கறை செலுத்துகிறார். இன்றைய இளைய சமுதாயம் அவரை விரும்புகிறது. அம்பாந்தோட்டையைவிட கிளிநொச்சியில் தான் அவர் கூடுதலாக அக்கறை எடுக்கிறார். அவருடைய அணுகுமுறை இளையவர்களை கவர்ந்திருக்கிறது. இன, மத, பேதங்களைக் கடந்து அவரை நாம் ஆதரிக்க வேண்டும்”

நல்லிணக்கமாய் நவில்கிறார் கீதாஞ்சலி!

No comments:

Post a Comment