Wednesday, January 09, 2013
கூடலூர்::கேரளா வழியாக, ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற, 51 இலங்கை அகதிகள், குமுளி போலீசாரிடம் சிக்கினர். கேரள மாநிலம், தேக்கடியில் உள்ள லாட்ஜில், நேற்று, 28 ஆண்கள், 10 பெண்கள், 13 குழந்தைகள் என, 51 இலங்கை அகதிகள், சுற்றுலா வந்ததாகக் கூறி தங்கினர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார், தமிழகத்தில் உள்ள கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தமிழக கியூபிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், லாட்ஜில் தங்கியிருந்த இலங்கை அகதிகளிடம் விசாரணை நடத்தினர்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள, அகதிகள் முகாமில் இருந்து, சுற்றுலா வந்ததாக தெரிவித்த அவர்கள், தேக்கடி, மூணாறு, குருவாயூர், பழநி சென்று, மீண்டும் அகதிகள் முகாமிற்கு செல்வதாக தெரிவித்தனர். அவர்களின் பதில், முன்னுக்கு பின் முரணாக இருந்ததால், அவர்களை, தமிழகப் பகுதியான கம்பத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். கேரளாவில் சுற்றுலா செல்வது போல் சென்று, ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றது, விசாரணையில் தெரியவந்தது. அவர்களை அழைத்து வந்த அகதி உமாரமணனிடம், விசாரணை நடத்தி வரும் போலீசார், ஏஜென்ட் யார் என்பது குறித்தும் விசாரிக்கின்றனர். விசாரணை முடித்து அவர்களை, ஏற்கனவே தங்கியிருந்த முகாமில் மீண்டும் ஒப்படைக்க, கியூ பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment