Monday, January 7, 2013

சேவை வரியை கண்டித்து சென்னையில் நடிகர்கள் உண்ணாவிரதம் : ரஜினி, விஜய், சூர்யா பங்கேற்பு!

Monday, January 07, 2013
சென்னை::சேவை வரி விதிப்பை எதிர்த்து சென்னையில் இன்று காலை தொடங்கிய உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினி, சரத்குமார், விஜய் உள்பட ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். உண்ணாவிரதத்தையொட்டி தமிழகம் முழுவதும் இன்று ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டன. தியேட்டர்களில் பகல் காட்சியும் ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசு பட்ஜெட்டில் சினிமா துறையினருக்கு சேவை வரி விதிக்கப்பட்டது. ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறும் நடிகர், நடிகைகள், டைரக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் 12.3 சதவீதம் சேவை வரி கட்ட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஜூலை முதல் இது அமலுக்கு வந்தது. சேவை வரி விதிப்புக்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சேவை வரியை ரத்து செய்யக்கோரி தமிழ்த் திரையுலகம் சார்பில் ஜனவரி 7&ம் தேதி (இன்று) உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம், திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம், திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கம், சென்னை திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டு, தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம், சின்னத்திரை தொழிலாளர்கள் கூட்டமைப்பு, சின்னத்திரை நடிகர் சங்கம், சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம், பிஆர்ஓ சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்தன. போராட்டத்தில் பங்கேற்க ரஜினி, கமல் உள்பட முன்னணி நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருக்க போலீசாரும் அனுமதி வழங்கினர்.

இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்துக்காக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே 250 அடி நீளம், 30 அடி அகலத்தில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டது. முன்னணி நடிகர், நடிகைகளுக்காக மேடையும் அமைக்கப்பட்டது. உண்ணாவிரதத்தில் பங்கேற்க காலையில் இருந்தே நடிகர், நடிகைகள் வள்ளுவர் கோட்டத்தில் திரள தொடங்கினர். நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த், கருப்பு உடை அணிந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் விஜய், பிரகாஷ்ராஜ், பிரபு, சத்யராஜ், வாகை சந்திரசேகர், பார்த்திபன், பாண்டியராஜன், விமல், விதார்த், விவேக், விஜயகுமார், அருண் விஜய், சரவணன், செல்வா, சிட்டிபாபு, வி.எஸ்.ராகவன், மனோபாலா, டெல்லி கணேஷ், சிங்கம்புலி, ராஜேஷ், அப்புகுட்டி, ராஜேஷ், மன்சூர் அலிகான், தியாகு, பொன்வண்ணன், நடிகைகள் ராதிகா, ஸ்ரீபிரியா, ரோகிணி, ரேகா, அருந்ததி, வடிவுக்கரசி, காவேரி, நளினி, சத்யப்ரியா, குயிலி, ரூபஸ்ரீ, நித்யா, சபிதா ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, கே.ராஜன், கே.எஸ்.சீனிவாசன், சித்ரா லட்சுமணன், அன்பாலயா பிரபாகரன், பிரமிட் நடராஜன், எர்ணாவூர் நாராயணன், டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன், ஜி.சிவா, வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, டி.வி. நடிகர்கள் அபிஷேக், சதீஷ், ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜூடோ ரத்னம், ஜாகுவார் தங்கம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றுள்ளனர். நடிகர், நடிகைகள் திரண்டதையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகளை காண ரசிகர்கள் அதிகளவில் கூடினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

உண்ணாவிரதத்தில் ரஜினிகாந்த்

தமிழ் திரையுலகின் உண்ணாவிரத போராட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது மத்திய அரசு சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், கூடுதல் வரி விதிப்பதால் கருப்புப் பணம் அதிகரிக்கும் என்பதை அரசு அறியும் என்று ரஜினிகாந்த் கூறினார். அதுமட்டுமின்றி வரி செலுத்தாதவர்களை தண்டிக்க தனிச் சட்டம் கொண்டு வரலாம் எனவும் அவர் யோசனை தெரிவித்தார்.

No comments:

Post a Comment