Sunday, January 06, 2013
இலங்கை::பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் தினத்தை தீர்மானிக்கும் பொருட்டு, நாளைய தினம் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒன்று நாளை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் சந்திமா வீரகொடி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள திவி நெகும சட்ட மூலம் தொடர்பிலும் பேசப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரதம நீதியரசருக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் 10ம் மற்றும் 11ம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்க தகவல்கள் தெரிவித்தன.
இந்த இரண்டு தினங்களிலும் இது குறித்த விவாதம் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை திவி நெகும சட்ட மூலத்துக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் தீர்மானம் மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் தற்சமயம் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் இது குறித்த தீர்மானத்தை இன்று பிற்பகலில் அறிவிக்கக் கூடியதாக இருக்கும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் திவி நெகும சட்ட மூலம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே கொண்டிருந்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
ஏற்கனவே இந்த சட்ட மூலத்துக்கு எதிரான தமிழ் தேசிய கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.
இந்த நிலையில் அதற்கு ஆதரவளித்து வாக்களிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் செயற்படவுள்ள முறைமை குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றும் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்த இரண்டு சட்ட மூலங்கள் தொடர்பிலும் இன்று நடைபெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கவிருப்பதாக, லங்கா சமசமாஜ கட்சி தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment