Monday, January 14, 2013
இலங்கை::அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடுகளை சர்வதேசம் விமர்சிப்பது இது முதற்தடவையல்ல. அத்துடன் இது எமக்கு பாரியவிடயமும் அல்ல. குற்றப்பிரேரணை விடயத்தில் வருகின்ற சர்வதேச விமர்சனங்களை நாங்கள் நுட்பரீதியாக எதிர்கொள்வோம் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை விவகாரம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் குறித்து விபரித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பில் குழியொன்றை வெட்டினாலும் சர்வதேசம் விமர்சிக்கும். பிரபாகரனை தேற்கடிக்க முற்பட்டபோதும் இவ்வாறே சர்வதேசம் விமர்சித்தது. ஆனால் நாங்கள் பிரபாகரனை தோற்கடித்து மக்களுக்கு சமாதானத்தைப் பெற்றுக் கொடுத்தோம். அது போன்றே இந்த நிலைமையையும் சமாளிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து விடயங்களையும் சர்வதேசம் விமர்சித்தே வந்துள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த மெனிக்பாம் முகாமில் மின்சாரம் தடைப்பட்டாலும் இந்த சர்வதேசம் விமர்சித்தது.
எமது நாட்டின் அரசியலமைப்பு மற்றும் குற்றப்பிரேரணை செயற்பாடு என்பனவற்றை புரிந்து கொண்டால் சர்வதேச சமூகம் விமர்சனங்களை முன்வைக்காது.
தற்போது எமது நாட்டின் அரசியல்வாதிகள் கூறும் விடயங்களை வைத்துக்கொண்டே சர்வதேச சமூகம் கருத்துக்களை வெளியிடுகின்றது. உண்மை நிலைமையை புரிந்து கொண்டால் சர்வதேச சமூகம் இவ்வாறு கருத்து வெளியிடாது.
அமெரிக்கா போன்ற நாடுகள் எமது செயற்பாட்டை விமர்சிப்பது புதிய விடயமல்ல. பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு விமர்சனம் செய்யப்பட்டது. உண்மை நிலைமையை விளக்குவதன் மூலம் இதனை சமாளிக்க முடியுமென்றார்

No comments:
Post a Comment