Tuesday, January 8, 2013

மாணவி பலாத்கார வழக்கு ரகசியமாக விசாரணை!

Tuesday, January 08, 2013
புதுடில்லி::டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை ரகசியமாக நடத்த உத்தரவிட்ட டில்லி கோர்ட், விசாரணை குறித்த செய்திகளை சேகரிக்க, மீடியாக்களுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டது.
டில்லியில், டிசம்பர், 16ம் தேதி, ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின், அந்த மாணவியை, கடுமையாக தாக்கிய அந்த கும்பல், அவரை பஸ்சிலிருந்து வெளியே தூக்கி வீசிச் சென்றது. படுகாயமடைந்த அந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம், நாடு முழுவதும், பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியதோடு, பெரும் போராட்டங்களுக்கும் வித்திட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய, ஆறு பேர், கைது செய்யப்பட்டனர்.

மாஜிஸ்திரேட் அதிருப்தி: இவர்களில், ஒரு குற்றவாளிக்கு, 16 வயதே ஆகியுள்ளதால், அவன் மீதான வழக்கு, சிறார் கோர்ட்டில் விசாரிக்கப்படவுள்ளது. மீதமுள்ள, ஐந்து குற்றவாளிகளும், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு குறித்த விசாரணை, டில்லி, சாகெட் பகுதியில் உள்ள, பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், நேற்று துவங்கியது. முன்னதாக, திகார் சிறையிலிருந்து, குற்றவாளிகள் ஐந்து பேரும், பலத்த பாதுகாப்புடன், கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, கோர்ட் வளாகம் முழுவதும், ஏராளமான பொதுமக்கள் மற்றும் வக்கீல்கள் திரண்டிருந்தனர். விசாரணை நடக்கும் கோர்ட் அறையிலும், பெரும் கூட்டம் காணப்பட்டது. விசாரணையை துவக்குவதற்காக வந்த, மாஜிஸ்திரேட், நம்ரீதா அகர்வால், அங்கு திரண்டிருந்த கூட்டத்தை பார்த்து, அதிருப்தி அடைந்தார்.இதன்பின், அவர் உத்தரவிட்டதாவது:

இங்குள்ள சூழ்நிலையை பார்க்கும்போது, இந்த வழக்கின் விசாரணையை, சுமுகமாக நடத்த முடியாது போல் தெரிகிறது. இங்கு அசாதாரணமான சூழல் நிலவுவதாக போலீசாரும், கவலை தெரிவித்துள்ளனர். இந்த வழக்கிற்கு தொடர்பில்லாத பலர், இங்கு கூடியுள்ளனர். இதனால், ஒரே கூச்சலும், குழப்பமுமாக உள்ளது. விசாரணை விவரங்களை பதிவு செய்யும், "ஸ்டெனோகிராபர்' போன்றோருக்கு அருகில் கூட, பலர் கூடி நிற்பதை காண முடிகிறது. இந்த கோர்ட் வளாகத்தில் உள்ள, சிறை அறை பொறுப்பாளரும், இவ்வளவு கூட்டம் இருப்பது குறித்து, கவலை தெரிவித்துள்ளார். இத்தனை கூட்டத்துக்கு மத்தியில், குற்றவாளிகளை, கோர்ட் அறைக்கு அழைத்து வர முடியாது என்றும், அவர் கூறியுள்ளார். அரசு தரப்பு வக்கீலும், பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து, மனு தாக்கல் செய்துள்ளார்.

"மீடியாக்களுக்கு தடை' :

இந்த வழக்கின் விசாரணையை, ரகசியமாக நடத்த வேண்டும் என்று, அவர் குறிப்பிட்டுள்ளார். டில்லி போலீசாரும், ஏற்கனவே இந்த விஷயத்தை, கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அவர்களின் வாதத்தை, கோர்ட் ஏற்றுக் கொள்கிறது. இந்த வழக்கின் விசாரணை முழுவதும், மூடப்பட்ட அறையில், ரகசியமாக நடத்தப்படும். வழக்கு விசாரணை குறித்த விவரங்களை வெளியிடுவதற்கு, மீடியாக்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. எனவே, கோர்ட் உத்தரவு இல்லாமல், வழக்கின் விசாரணை குறித்த விவரங்களை செய்தியாக வெளியிடவோ, காட்சிகளாக ஒளிபரப்பவோ கூடாது. இந்த வழக்கிற்கு தொடர்பில்லாத, அனைவரும், உடனடியாக இங்கிருந்து வெளியேற வேண்டும். இவ்வாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.இதையடுத்து, வழக்கிற்கு தொடர்பில்லாத அனைவரும், கோர்ட் வளாகத்திலிருந்து, போலீசாரால் வெளியேற்றப்பட்டனர். இதன்பின், ஐந்து குற்றவாளிகளும், கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர் களுக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. மீடியாக்களுக்கு தடை விதிக்க கூடாது எனக் கோரி, சில வக்கீல்கள் தாக்கல் செய்த மனுக்களும், தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை, 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, குற்றவாளிகளின் சட்ட உதவிக்காக, அரசு செலவில் வக்கீல்கள் நியமிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும், மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.

வக்கீலுக்கு எதிர்ப்பு :

டில்லி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராக, மோகன் லால் சர்மா என்ற வக்கீல் முன் வந்தார். நேற்று அவர் கோர்ட்டுக்கு வந்தபோது, மற்ற வக்கீல்கள், அவரை முற்றுகையிட்டனர். "குற்றவாளிகளுக்கு யாரும் ஆஜராக கூடாது என, ஏற்கனவே, வக்கீல் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை மீறி, நீங்கள் ஆஜராகக் கூடாது' என, கூறி, கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, மோகன் லால் சர்மாவுக்கும், மற்ற வக்கீல்களுக்கும் இடையே, காரசாரமான வாக்குவாதங்கள் நடந்தன.

மாணவி குடும்பத்தினர் கோபம் :

பாலியல் பலாத்கார சம்பவத்தில், உயிரிழந்த மாணவியின் சகோதரர் கூறியதாவது: பலாத்காரத்தில் ஈடுபட்ட, ஆறு குற்றவாளிகளில், இரண்டு பேரை, அப்ரூவராக மாற்றுவதற்கு, முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைப்பதை, தடுக்கும் செயல். இந்த வழக்கிற்கு, போதிய அளவில் சாட்சிகள் உள்ளனர். எனவே, குற்றவாளிகளை அப்ரூவராக்கும் முயற்சி தேவையற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணைக்கு உத்தரவு :

பாலியல் பலாத்காரம் நடந்த தினத்தில், மருத்துவ மாணவியுடன் சென்ற, அவரது நண்பர், போலீசார் மீது, கடும் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். கடும் தாக்குதலுக்கு ஆளாகி, பஸ்சிலிருந்து தூக்கி வீசப்பட்ட பின், போலீசாருக்கு தகவல் கொடுத்தும், அவர்கள் விரைவில், சம்பவ இடத்துக்கு வரவில்லை என்றும், மருத்துவமனையில் சேர்ப்பதற்கு, தாமதப்படுத்தினர் என்றும், அவர் கூறியிருந்தார். இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உள்துறை அமைச்சக இணைச் செயலர், இந்த விசாரணையை நடத்துவார் என்றும், அமைச்சகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment