Wednesday, January 09, 2013
லண்டன்::இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் செயலாளர் அலிஸ்டர் பர்ட் இரண்டு வாரங்களில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இலங்கையின் நிலைமைகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அலிஸ்டர் பர்ட் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிப்பதனைத் தாண்டி அடிப்படை ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். முரண்பாடு ஏற்படுவதற்கான காரணிகளை கண்டறிதல் மற்றும் அரசியல் தீர்வுத் திட்டம் என்பவற்றின் மூலம் நிலையான சமாதானத்தை எட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சகல இன சமூக இலங்கையர்களினதும் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை அமைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் இந்த ஆண்டு நடாத்துவது என ஏற்கனவே உறுப்பு நாடுகள் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்மானம் குறித்து மீளாய்வு செய்ய வேண்டுமாயின் சகல உறுப்பு நாடுகளினதும் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இலங்கை விவாகரம் மட்டுமன்றி ஏனைய விடயங்களும் விவாதிக்கப்படும் என்ற போதிலும், ஏற்பாடு செய்யும் நாடு என்ற ரீதியில் இலங்கை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உறுதி செய்யும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்படும் என அலிஸ்டர் பர்ட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானிய பாராளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment