Saturday, January 12, 2013
பூஞ்ச்::காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை எல்லை மோதல் அதிகரித்தது. கடந்த செவ்வாய்க்கிழமை காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்ட எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இரண்டு இந்திய ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்று, தலையை துண்டித்து எடுத்து சென்றனர். இது இந்திய ராணுவ வீரர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
எல்லையில் பதற்றத்தையும் அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காஷ்மீர் எல்லை யில் மாலை 5.30 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரை பாகிஸ்தான் வீரர்கள் இந்திய நிலைகள் மீது திடீர் தாக்குதல் நடத்தினார்கள். சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த மோதலின்போது, இந்தியா அதிரடியாக பதிலடி கொடுத்தது. இதில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் மோதல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் கூடுதல் ராணுவத்தை எல்லைக்கு அனுப்பி வருகின்றன. இதனால் நேற்று மோதல் அதிகரித்தது.
நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இந்தியாவின் 9 நிலைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். நேற்று பகலில் எல்லையில் மவுனமாக இருந்த பாகிஸ்தான் வீரர்கள் பிற்பகல் 4.30 மணிக்கு வாலாட்ட தொடங்கினார்கள். காஷ்மீரில் உள்ள கிருஷ்ணா காட், சோனா காலி பகுதிகளில் உள்ள இந்தியாவின் 5 நிலைகள் மீது திடீர் தாக்குதல் நடத்தினார்கள். அந்த 5 நிலைகளிலும் இன்று அதிகாலை வரை விடிய, விடிய துப்பாக்கி சண்டை நடந்தது.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை நேரத்திலும் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி வந்து தாக்கினார்கள். விடிய, விடிய நடந்த இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்த சண்டையில் இந்திய வீரர்கள் தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. பாகிஸ்தான் தரப்பில் எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிய வில்லை.
எல்லையில் விடிய, விடிய சண்டை நடந்துள்ளதால் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து எல்லை நெடுக இந்திய வீரர்கள் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பும் ரோந்து பணியும் அதிகரிக் கப்பட்டுள்ளது. எல்லையில் நடந்து வரும் மோதல்கள் தொடர்பாக இரு நாடுகளும் பரஸ்பரம் தூதர்களை அழைத்து ஆட்சேபம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பாக பேச்சு நடத்த பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்தியா அதை நிராகரித்து விட்டது. இந்தியாவுக்குள் தீவிர வாதிகளை ஊடுருவ செய்யவே இத்தகைய தாக்கு தல்கள் திட்டமிட்டு நடத்தப்படுவதாக இந்தியா குற்றஞ்சாட்டி உள்ளது. ஆனால் இதை மறுக்கும் பாகிஸ்தான் அதிகாரிகள், இந்திய வீரர்களை தாங்கள் தலை துண்டித்து கொல்லவில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். இதனால் எல்லை மோதலில் தொடர்ந்து குமுறல் நீடித்தப்படி உள்ளது.
இந்த நிலையில் லஷ்கர்- இ- தொய்பா இயக்க தலைவனான தீவிரவாதி ஹபீஸ் சயீது இந்தியாவுக்கு திடீர் மிரட்டல் விடுத்துள்ளான். ராய்டர் செய்தி நிறுவனத்துக்கு போனில் பேட்டியளித்த அவன், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மோதல் போராக வெடிக்கும் என்று கூறியுள்ளான். அவன் மேலும் கூறியதாவது:-
பாகிஸ்தான் நாட்டை ஒரு நிலையற்ற தன்மையில் வைத்திருக்க இந்தியா நினைக்கிறது. எனவேதான் காஷ்மீர் எல்லையில் திட்ட மிட்டு இந்த பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வந்து விட கூடாது என்பதே இந்தியா வின் எண்ணமாக உள்ளது.
இந்த பதற்றத்தை போராக மாற்ற முடியும். ஆனால் நாங்கள் அதை தவிர்க்க விரும்புகிறோம். எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்துக்கு நானோ, லஷ்கர்-இ-தொய்பாவோ காரணம் அல்ல. எல்லையில் எந்த படையையும் பயன் படுத்த நாங்கள் நினைக்க வில்லை. நான் எல்லை பகுதிக்கே செல்லவில்லை. ஆனால் நான் எல்லைக்கு வந்ததாகவும், அதன் பிறகு 2 இந்திய வீரர்கள் தலை துண்டித்து கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் உண்மை இல்லை. இந்திய ராணுவம் தான் எல்லையில் பதற்றத்தை நீடித்தப்படி உள்ளது. காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண அமைதி நட வடிக்கை எடுக்கப்படும் போதெல்லாம் இந்தியா அதை சீர்குலைத்து விடுகிறது.
அமைதி பேச்சு தொடங்கியதும் இந்தியா ஏதாவது செய்து அதை குலைத்து விடும். இதை இந்தியா வழக்கமாக வைத்துள்ளது. இப்போதும் இந்தியா அதை செய்து சர்வதேச சமூகத்தை ஏமாற்றுகிறது. இந்த பிரச்சினையின் தொடர்ச்சியாகத்தான் பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. பாகிஸ்தானில் குண்டு வெடித்து 120 பேர் பலியானதற்கு இந்திய உளவுப்படையே காரணமாகும்.
இவ்வாறு தீவிரவாதி ஹபீஸ் சயிது கூறினான்.





No comments:
Post a Comment