Saturday, January 12, 2013

யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன்: விஜயகாந்த் பேச்சு!

Saturday, January 12, 2013
தஞ்சாவூர்::தஞ்சை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கியும், ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கியும், டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு தண்ணீர் பெற்றுத்தராத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது.

தற்கொலை செய்து கொண்ட 12 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும், ஏழைகளுக்கு பொங்கல் பொருட்களும் வழங்கியும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்டன உரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

எனக்கு எந்த பயமும் கிடையாது. கூடங்குளம் பகுதியில் அந்த பகுதி மக்களின் பயத்தை போக்குங்கள் என்றேன். போக்கவில்லை. ஆனால் இன்று வரை மக்கள் அங்கு போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். மக்களை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும், மக்களுக்கு நல்லது செய்யத்தான் கட்சிகள் உள்ளன.

அந்த அடிப்படையில் நான் உங்களின் விருப்பத்தை கேட்டுகூட்டணி வைத்தேன். ஆனால் அந்த கூட்டணி பாதியில் முடிந்து விட்டது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் நீங்கள் பம்பரமாக வேலை செய்ய வேண்டும். நான் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவன். நான் தெய்வத்தோடும், மக்களோடும் தான் கூட்டணி என்றேன்.

ஆனால் மக்களாகிய உங்களிடம் கேட்டு தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தேன். (அப்போது கூட்டத்தை பார்த்து இனி கூட்டணி வேண்டுமா? என கேட்டார். அதற்கு அவர்கள் கூட்டணி வேண்டாம் என்றனர்). நான் இனி கூட்டணி வைக்க மாட்டேன். அப்படியே கூட்டணி வைத்தால் சேலத்தில் மாநாடு நடத்தி உங்களிடம் கேட்டு சட்டமன்ற தேர்தலில் முடிவு செய்தது போல், உங்களிடம் கேட்டு தான் முடிவு செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment