Monday, January 7, 2013

வடக்கு மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு இராணுவத்தினர் தொடர்ச்சியாக உதவி!

Monday, January 07, 2013
இலங்கை::வட மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பாதுகாப்புப் படையினர் பல கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சேதமடைந்த பாடசாலைகளை புனரமைத்தல், பாடசாலை உபகரணங்களை வழங்குதல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகளை மேற்கொள்ளல், தளபாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்குதல் , விளையாட்டு நிகழ்ச்சிகளை நடாத்தல் போன்ற பல கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் 2012 ஆம் ஆண்டின் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 148 புள்ளிகளை பெற்ற, சோரம்பத்து கத்தோலிய தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த செல்வராசா கின்சிகாவுக்கு 552 ஆவது படைப்பிரிவினால் விருது வழங்கப்பட்டுள்ளது.
ரூபா 6200/= உடன் புதிய வருடத்திற்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் உள்ளடங்கிய பரிசுப்பொதியும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இவரது கல்வியை சிறந்த முறையில் தொடர தேவையான மேலும் பல உதவிகளை இப் படையினர் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
அதேவேளை தச்சனாமரதமுது பாடசாலையின் 172 மாணவர்கள் அண்மையில் பாடசாலைப் புத்தகங்கள், காலணிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் உள்ளடங்கிய பொருட்களை 61 ஆவது படைப்பிரிவினரிடம் இருந்து அன்பளிப்பாக பெற்றுக்கொண்டனர். புதிய வருடத்திற்கான பாடசாலை உபகரணங்களை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நலன்விரும்பிகளுடன் இணைந்து இச் சேவையை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment