Saturday, January 5, 2013

1.84 கோடி ரேஷன் கார்டுகளுக்கு 100 ரொக்கத்துடன் சிறப்பு பொங்கல் பரிசு : ஜெயலலிதா அறிவிப்பு!

Saturday, January 05, 2013
சென்னை::பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1.84 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 100 ரூபாய் ரொக்கத்துடன் 160 ரூபாய் மதிப்புள்ள சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சம்பா பயிரை காப்பாற்ற 18 டிஎம்சி தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவை கடந்த 4ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசு தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டிய தண்ணீர் குறித்து காவிரி கண்காணிப்பு குழு வரும் 11ம் தேதிக்குள் கூடி முடிவு எடுக்க வேண்டும்.

காவிரி மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுவது குறித்து வரும் 31ம் தேதிக்குள் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. டெல்டா விவசாயிகளின் துயரை துடைக்கும் பொருட்டு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழும், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.13,692 வரை நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, விவசாயிகளுக்கு மேலும் அளிக்க வேண்டிய நிவாரணம் குறித்து ஆராய, நிதி அமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த குழு வறட்சி நிலைமை மற்றும் பயிரிழப்பு குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்யும்.

அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதி விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் வழங்கப்படும். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்காக அரிசி பெறும் சுமார் 1 கோடியே 84 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.160 மதிப்புள்ள சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு ஒன்று அளிக்கப்படும். இந்த தொகுப்பில் ரூ.20 மதிப்புள்ள 1 கிலோ பச்சரிசி, ரூ.40 மதிப்புள்ள 1 கிலோ சர்க்கரை மற்றும் பொங்கல் பண்டிகைக்கான இதர பொருட்கள் வாங்குவதற்காக ரூ.100 ரொக்கம் ஆகியவை அடங்கும். இந்த தொகுப்பு அந்தந்த நியாய விலை கடைகள் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.300 கோடி செலவு ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment