Monday, January 07, 2013
இலங்கை::வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்டமூலத்துக்கும், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கும் முடிச்சுப் போட முனைய வேண்டாமெனவும், தமிழ் சமூகத்தை தவறாக வழிநடத்த முயற்பட வேண்டாமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளிடம் கேட்டுக் கொண்டார்.
வடக்கின் மூன்றிலிரண்டு பகுதி மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழி தேடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் மூலம் அதற்கான வேலைத்திட்டமே முன்வைக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், எதிர்க்கட்சிகள் தெரிவிப்பது போன்று அதன்மூலம் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எந்த பாதகமான விளைவுகளும் ஏற்படப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்டமூலம் தொடர்பாக எழுந்திருக்கும் சந்தேகங்களை நிவர்த்திக்கும் வகையில் தினக்குரலுக்கு அளித்த விசேட பேட்டியின் போதே மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.
வாழ்வின் எழுச்சித்திட்டத்தையும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் ஒன்றோடொன்று முடிச்சுப்போட்டு எதிர்க்கட்சிகள் பேசிவருகின்றன. இதுதவறானதொன்றாகும், 13 ஆவது திருத்தத்தை மாற்றுவதற்கோ, ஒழிப்பதற்கோ அரச எந்த முடிவையும் எடுக்கவில்லை. அரசில் அங்கம் வகிக்கும் ஒருசிலர் தெரிவித்துவரும் கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களேயன்றி அரசின் நிலைப்பாடல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும். 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முனைந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அது காலம் கடந்த உழுத்துப் போன விவகாரம் என்று வசைபாடித்திரிந்து விட்டு இன்று அதற்காக முதலைக்கண்ணீர் வடிக்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள் மக்களை தவறாக வழிநடத்தி சுயநல அரசியல் நடத்தி பிழைக்க முயற்சிக்கின்றனர்.
வடக்கில் இன்று மூன்றிலிரண்டு மக்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே இன்றும் இருக்கின்றனர் அவர்களுக்கு நிவாரணத்தையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வேலைத்திட்டத்தையுமே வாழ்வின் எழுச்சி (திவிநெகும) திட்டம் நடைமுறைப்படுத்தப்போகிறது.
இதுதொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 12 இல் 10 விடயங்கள் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏனைய இரண்டில் ஒன்று நிதி ஒதுக்கீடு சம்பந்தபட்டதாகும். எந்த நிதியும் நேரடியாக சென்றடையாமல் திறைசேரிக்கும் அனுப்பப்பட்டு அவை பாராளுமன்றத்தினூடாகவே விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்தது பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதாகும். அதனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அரசுக்கு இருக்கின்றது. சர்வஜன வாக்கெடுப்பு குறித்த எதிரணிகளின் கோரிக்கை அர்த்தமற்றது. அதுஅவசியப்படவில்லை.
இந்த வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் மூலம் சுயதொழில்வாய்ப்புகளை மேம்படுத்தவும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment