Tuesday, January 8, 2013

கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைவோருக்கு புகலிடமில்லை!ஆட்கடத்தலில் ஈடுபடுவோருக்கு 10 வருடங்களுக்கு மேல் சிறை: தண்டப்பணமும் அறவிடப்படும்!

Tuesday, January 08, 2013
இலங்கை::கனடாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல விரும்பி கடத்தல் காரர்களிடம் வீணாக பெருந்தொகை பணத்தைக்கொடுத்து எவரும் ஏமாற வேண்டாம் என கனடாவின் குடியுரிமை, குடிவரவு மற்றும் பல்லினக்கலாசார அமைச்சர் ஜேசன் கெனீ கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த வருடம் கனடாவின் குடிவரவுச் சட்டம் கடுமையாக்கப்பட்டிருப்பதால் சட்டவிரோதமாக நுழையும் எவருக்கும் புகலிடம் கோர முடியாது என்பதுடன், ஆட்கடத்தல்களில் ஈடுபடுபவர்கள் 10 வருடத்துக்கு மேலாக சிறையில் அடைக்கப்படுவதுடன், அவர்களிடமிருந்து பெருந்தொகையான தண்டப்பணம் அறவிடப்படும் என்றும் கனேடிய அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் கனடாவின் குடியுரிமை, குடிவரவு மற்றும் பல்லினக்கலாசார அமைச்சர் ஜேசன் கெனீ நேற்று கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், கடந்த சில வருடங்களில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைந்து புகலிடம் கோர முயற்சித்துள்ளனர்.
இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தாய்லாந்து, இந்தோனேசியா, டோகோ போன்ற நாடுகளுடன் இணைந்து கனடா நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல்களைக் கட்டுப்படுத்த கனேடிய பிரதமர் 2012 ஆம் ஆண்டு 12 மில்லியன் கனேடிய டொலர்களை ஒதுக்கியுள்ளார்.

சட்டவிரோத ஆட்கடத்தல் முகவர்கள் கனடா பற்றிய எந்தவிதமான அறிவுமின்றி மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி, அவர்களிடமிருந்து பெருந்தொகையான பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசமான படகுகளில் அழைத்துச் செல்கின்றனர். அவர்களை நடுவழியில் இறக்கி பரிதவிக்கவிட்டுவிட்டு தலை மறைவாகி விடுகின்றனர். இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2010 ஆம் ஆண்டு கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த 200 இலங்கையர் தாய்லாந்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். 2011 ஆம் ஆண்டு ஜூலை, 84 இலங்கையர் இந்தோனேசிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர். 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர், 209 இலங்கையர் டோகோவில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அழைத்துவந்த முகவர்களைப் பிடிப்பதற்கு அந்தந்த நாடுகளுடன் சேர்ந்து கனடாவும் நடவடிக்கை எடுக்கும்.

இதனையும் மீறி சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைபவர்கள் புகலிடக் கோரிக்கையை முன்வைத்தால், அது நிராகரிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள். புகலிடக் கோரிக்கை விண்ணப்பம் ஏற்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றாலும் குறைந்தது 5 வருடங்களுக்கு அவர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படாது.
அதேநேரம், போலியான ஆவணங்களை சமர்ப்பித்து எவரும் புகலிடக் கோரிக்கைக்கு விண்ணப்பிக்க முடியாது. சட்டவிரோத ஆட்கடத்தல்களைத் தடுப்பதற்கு கனடா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைபவர்கள் தடுப்பு முகாம்களிலேயே தடுத்து வைக்கப்படுவார்கள். 2009 ஆம் ஆண்டு கப்பல் மூலம் கனடாவுக்குள் நுழைந்தவர்களில் பலர் தொடர்ந்தும் தடுப்பு முகாம்களிலேயே தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே, சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்களின் புகலிடக் கோரிக்கைகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அவ்வாறு பரிசீலிப்பதாயினும் அதற்கு உரிய காலம் எடுக்கும். எனவே எவரும் சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைவதற்கு முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment