யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியாக தமது அஞ்சலியை செலுத்தியது உண்மை. ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக ஆயுதப்படையினரும், பொலிஸாரும் காவல் கடமையில் நின்றதும் உண்மை.
ஆனால் மாணவர்களைப் படையினர் தாக்குவதாகக் கனவு கண்டு தனது பத்திரிகை ஆசிரியருடன் கமராவையும் தூக்கிக்கொண்டு ஓடி வந்தேன் என்பது சுத்தப் பொய்.
அங்கு சென்று அமைதியாகவிருந்த மாணவர்களை உசுப்பிவிட்டு கலகத்தை ஏற்படுத்தி தனது ஆட்களை வைத்தே தனது வாகனத்திற்கு கல்லெறிந்துவிட்டு அதனைப் படம் பிடித்துத் தனது பத்திரிகையிலும் பின் ஊடகங்களிலும் பிரசுரித்து ஏன் இந்த சீப்பான பப்பிளிசிட்டி.
தமிழன் பட்டது போதாதா? மாணவ சமூகத்தை உசுப்பிவிட்டு இன்னுமொரு அழிவு தமிழ்ச் சமூகத்திற்குத் தேவையா? நீங்கள் கனடாவிலும், லண்டனிலும் வாங்கி வைத்திருக்கும் வீடுகளுக்கு ஓடிவிடுவீர்கள். பாவப்பட்ட சனம் எங்கு செல்வது? உங்களது தேவை என்றதும் இயங்கவிடாது பூட்டுப்போட்டு வைத்திருந்த ஊடகக் குரலுக்கும் உயிர் கொடுத்து உங்களுக்குச் சார்பாக அறிக்கை விடுமாறு அதன் தலைவரிடம் கெஞ்சியது ஊருக்கே தெரியும்.
* ஒருவரை ஒருவர் போட்டுக்கொடுப்பதில் முகா.வும் TNA யும் சமநிலையில்
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு இராஜதந்திரப் பிரதிநிதிகளிடம் ஒருவரை ஒருவர் போட்டுக்கொடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையே போட்டி வைத்தால் இரு அணிகளுமே சமநிலையில் நிற்கும் எனுமளவிற்கு திரைமறைவில் கல்லெறிதல் தாராளமாக நடைபெற்றுவருகிறது.
கடந்த வாரம் இலங்கைக்கு வந்திருந்த ஐ.நா வின் ஆசிய பசுபிக் பிராந்திய சிரேஷ்ட அதிகாரி ஹிடோகி டென்னுடனான சந்திப்பிலும் இதுவே நடந்துள்ளது.
ஏன் இந்தக் கொலைவெறி? ஒரே நாட்டில் ஒரே மொழி பேசும் சமூகமாக வாழும் நீங்கள் இதுவரை உங்களுக்குள் எதுவுமே மனம் விட்டுப் பேசிக்கொள்ளாது வெளிநாட்டிலிருந்து வருபவர்களிடம் உங்களது மன ஆதங்கங்களைக் கொட்டித் தீர்ப்பதன் மூலம் என்ன பிரயோசனம்? அது உங்களது கட்சிகளிடையே மட்டுமல்லாது உங்களைத் தமது பிரதிநிதிகளாக நம்பிக் கொண்டிருக்கும் மக்களையும் படுகுழிக்குள்ளேயே தள்ளிவிட்டுவிடும்.
இனிமேலாவது சிந்தித்து நடப்பது மக்களுக்கல்ல உங்களது எதிர்கால அரசியல் இருப்பிற்கு ஆரோக்கியம்!



No comments:
Post a Comment