Thursday, December 06, 2012
சென்னை::டிஷர்ட்டுகளில் ‘போலீஸ் என எழுதப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் பல்வேறு கவர்ச்சிகரமான வாசகங்கள் எழுதிய டிஷர்ட்டுகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் டிஷர்ட்டுகளில் போலீஸ் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. சமீபத்தில் பெங்களூரில் இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் நடந்த கருத்தரங்கில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டார்.
அவருடன் அரங்கிற்குள் வந்த அழைப்பாளர் ஒருவர் அணிந்திருந்த டிஷர்ட்டில் போலீஸ் என்ற வாசகம் இருந்தது. இதை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் அப்போதைக்கு அவரை அனுமதித்தனர். நிகழ்ச்சிக்குப்பின் விசாரித்தபோது அவர் போலீஸ் இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இது போன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையிலும், போலீசின் கண்ணியத்தை காக்கும் வகையிலும் போலீஸ் என்ற வாசகம் தாங்கிய டிஷர்ட் மற்றும் ஆடைகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment