Monday, December 3, 2012

ஈழத் தமிழகம் கிடைக்க ‘டெசோ’ மூலம் முயற்சி : (புலி ஆதரவு) கருணாநிதி பேச்சு!

Monday, December 03, 2012
சென்னை::தி.க. தலைவர் கி.வீரமணியின் 80வது பிறந்த நாள் விழா நேற்று இரவு நடந்தது. இதில் (புலி ஆதரவு)  திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: பெரியார் திடலுக்கு, நடிகவேள் ராதா மன்றத்திற்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில், தமிழர் தலைவர் கி.வீரமணியின் 80வது ஆண்டு பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறோம். வயதைப் பொறுத்தவரையில் நானும், வீரமணியும் சற்று வேறுபாடானவர்கள். அவருக்கு 80 வயது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் எனக்கு 90 வயது. ஆக, 90 வயதை எட்டக் கூடிய நான், அந்த இடம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்ற நான்; 80ஐ வாழ்த்தி மகிழ்கிறேன் என்றால், என்னுடைய இளமைக் காலத்தை நானும் இளவல் வீரமணியும் பெரியாருடைய கொள்கைகளை இந்த நாட்டிலே பரப்புவதற்காக அரும்பாடுபட்டு, அன்றைக்கு தொண்டாற்றிய அந்தக் காலங்கள் எல்லாம் எனக்கு நினைவுக்கு வரத் தவறவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய போது சென்னை ராபின்சன் பூங்காவில், அறிஞர் அண்ணா என்ன சொன்னார் என்றால், ‘நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்குகிறோம், இது பெரியாருக்கு விரோதமாக அல்ல; திராவிடர் கழகத்திற்கு எதிர்ப்பாக அல்ல;  திராவிடர் கழகத்திற்கு துணையாக,  இரட்டைக் குழல் துப்பாக்கியாக திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இருக்கும், விளங்கும்’ என்று குறிப்பிட்டது இன்றைக்கும் நினைவிலே இருக்கின்றது என்பதற்கு அடையாளம் தான் இந்தத் திடலில் நாங்கள்  இருவரும் ஒன்றாக அமர்ந்திருப்பதும், இரண்டு இயக்கத்தின் நண்பர்களும் இங்கே குழுமியிருப்பதும் ஆகும். தி.மு.கவை அழித்து விட வேண்டுமென்று எதிரிகள் முற்படுவார்களேயானால், அதைத் தடுத்து நிறுத்தக் கூடிய கேடயமாக தி.க, இயங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

ஆகவே எங்களிடத்திலே வாலாட்ட வேண்டுமென்று விரும்புகின்றவர்கள் ஜாக்கிரதை என்றுதான் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன். கலப்புத் திருமணம், சாதியை மறுத்து நடைபெற்ற காரணத்தால்தான் தர்மபுரியிலே இவ்வளவு பெரிய கலவரம் நடைபெற்றது. தர்மபுரி கலவரத்திற்கு சாதி மறுப்புத் திருமணம், காதல் திருமணமும்  ஒரு காரணமாக ஆயிற்று என்பதை ஏடு களிலே படித்திருக்கிறீர்கள். இதற்கெல்லாம் என்ன காரணம்? பெரியார் இல்லை. பெரியார் போற்றிய அந்தக் கொள்கையை விதைத்தவர்கள், அதை பரப்புகின்றவர்கள், அதைத் தருவாக வளர்த்து தன்மானத்தை தமிழகத்திலே பரப்புகின்றவர்கள் ஆட்சியிலும்  இல்லாத காரணத்தால், அவர்களுடைய தொண்டர்களாகிய எங்களால் முழுமையாக இயலவில்லை, முடியவில்லை, எங்களைச் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் இன்னமும் தாக்கிக் கொண்டிருப்பவர்கள், இன்னமும் தி.மு.கழகத்தையும் , தி.க.வையும் அழிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள், சாதியை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இனி பத்தாண்டு காலத்திற்கு மேல்  சாதியை வைத்து எவரும் தமிழ்நாட்டிலே  யாரையும் ஏமாற்ற முடியாது. ஏனென்றால் பார்க்குமிடம் எல்லாம், இன்றைக்கு இளைஞர்கள் தயாராகிக் கொண்டு வருகிறார்கள். தந்தை பெரியார் அவர்களின் காலத்தில் ஏற்பட்ட அதே வெற்றியை மீண்டும் எங்கள் காலத்திலும் பெற்றுத் தர ஒத்துழைப்பீர்களேயானால், சமத்துவபுரங்கள் மீண்டும் தோன்றும். அப்படித் தோன்றுகின்ற  சமத்துவபுரங்கள் இன்னும் அதிகமாகுமேயானால், ‘தர்மபுரி’கள் தோன்றாது. இலங்கைத் தமிழர்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அந்த இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தது திமுக என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஏதோ இப்போதுதான் ஐ.நா. சபைக்கு நாம் வேண்டுகோள் விடுக்கிறோம் என்பதைப் போல சிலர் சொல்கிறார்கள். ஒரு புத்திசாலி சொல்லியிருக்கிறார். ‘ஐ.நா. சபைக்கு  இங்கேயிருந்தே கடிதம் அனுப்பியிருக்கலாமே, பேக்ஸ் மூலமாகத் தெரிவித்திருக்கலாமே’ என்று அமைச்சராக இருந்த ஒருவர், அவரே ஐ.நா. மன்றத்திற்கு நேரில் சென்றதை மறந்து விட்டுச் சொல்லியிருக்கிறார். இதுதான் தமிழர்களிடம் உள்ள விதண்டாவாதம். தமிழன் உருப்படாமல் போனதற்கு காரணமே, இதுதான். இல்லாவிட்டால் பிரபாகரன் ஆரம்பித்த அந்தக் காலத்திலேயே நமக்கு அவர் ஆயுதம் ஏந்திப் போரிடத் தொடங்கிய அந்தக் காலத்திலேயே நமக்கு ஈழத் தமிழர்களின் விடுதலை கிடைத்திருக்கும்.

அது கிடைக்காமல் போனதற்கு காரணம், அங்குள்ள தமிழர்களை நசுக்கியது சிங்களவர்கள் அல்ல. இங்குள்ள தமிழர்கள். அவர்களும் வேறுபட்டு இந்த வேறுபாட்டின் காரணமாக அங்குள்ள தமிழர்களையும் வேறுபடுத்தி, அதன் காரணமாக வேற்றுமை விரிவடைந்து, ஒற்றுமை நீங்கி, இலங்கையிலே கிடைக்க வேண்டிய உரிமைகள், ஈழத் தமிழகம் கிடைக்கவில்லை. ஆனால் அந்த ஈழத் தமிழகம் கிடைப்பதற்கான முயற்சிகளை நானும், வீரமணி, சுப. வீரபாண்டியன், திருமாவளவன் ஆகியோர் இருக்கின்ற டெசோ அமைப்பின் மூலமாக நாங்கள்  பெறுவதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டிருக்கிறோம். அந்த முயற்சிகள் வென்றிட உங்களுடைய ஒத்துழைப்பு தேவை.

No comments:

Post a Comment