Monday, December 3, 2012

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் : மத்திய அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்!

Monday, December 03, 2012
சென்னை::யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: யாழ்ப்பாணத்தில் பயிலும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது  இலங்கை ராணுவத்தினர் தாக்குதல்  நடத்தி, அதற்கு தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்திருக்கின்றார்கள். மேலும் கார்த்திகை தீபத்தையொட்டி இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில், வீடுகளில் ஏற்றி வைத்த விளக்குகளையும் கூட இலங்கை ராணுவத்தினர் அடித்து நொறுக்கி ஈழத் தமிழர்கள் மனதை காயப்படுத்தியிருக்கிறார்கள். மாவீரர் தினத்தையொட்டி  நவம்பர் 27ம் தேதி அன்று வீர வணக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை ராணுவத்தினர் தாக்கியிருக்கிறார்கள்.

இது குறித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும், சிங்களருமான சஞ்சீவ பண்டார பேட்டி அளிக்கையில், Ôயாழ் பல்கலைக் கழக மாணவர்கள் தாக்கப்பட்டது, மற்றும் நான்கு மாணவர்களின் கைது  நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக் கழக மாணவர்களும்  ஒன்றிணைந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்; கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்Õ என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியை அமெரிக்கத் தூதரகம்  வன்மையாகக் கண்டித்துள்ளது. இது பற்றி  இந்திய தூதரகமும் விசாரித்து, இந்திய அரசிடம் தெரிவித்து, அரசின் சார்பில் வன்மையான கண்டனத்தை ராஜபக்சேயின் இலங்கை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment