Monday, December 3, 2012

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டிற்காக எதிர்காலத்தில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 03, 2012
இலங்கை::கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டிற்காக எதிர்காலத்தில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சபை மண்டபத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகிய இன்று உங்களை முகமுகமாய் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். முன்னர் சமூக சேவை மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக நான் இருந்த காலத்தில், மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்த போதிலும் அப்போதிருந்த யுத்த சூழ்நிலை காரணமாக இப்பகுதிகளில் அந்த உதவித்திட்டங்கள் முழுமையாக கிடைக்கப்பெறாத சூழல் இருந்து வந்தது.

ஆனாலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அங்கவீனர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

குறிப்பாக அவர்களுக்கான தொழில் நடவடிக்கைகளுக்குரிய தொழில் உபகரணங்களுடன் அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ள அதேவேளை, மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பத்தலைவர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஏனைய உதவித்திட்டங்கள் கிடைக்கும் வகையிலும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் உறுதிமொழி வழங்கினார்.

பொலிஸ் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்த நிகழ்வில் சர்வதேச Handicap நிறுவனத்தின் பிரதிநிதி திருமதி சென் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் பங்கெடுத்த கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

1992 ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் உதயன், கிளிநொச்சி மாவட்ட அரசஅதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பொலிஸ் பிரதம அதிகாரி நீல்தளுவத்த உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சியில் 2013 ம் ஆண்டு சமுர்த்தி திட்டம் பூரணமாக அமுல்படுத்தப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2013 ம் ஆண்டு சமுர்த்தி திட்டம் பூரணமாக அமுல்படுத்தப்படுமென  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிமொழி வழங்கினார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இன்றையதினம் (03) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு தொடர்பான சிறப்புக் கலந்துரையாடலின் போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

இதன்போது இந்திய வீட்டுத்திட்ட கட்டுமானப்பணிகளை அரச அதிகாரிகள் ஒருவர் கண்காணிப்பதுடன், அதற்கேற்ப வழிகாட்டுதலாக இருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட அமைச்சர் அவர்கள், இந்திய வீட்டுத்திட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச செயலர் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும், அதன் விபரங்கள் தொடர்பில் துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் மீள்குடியேற்றத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் வகையில் தாம் செயற்திட்டங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும், தற்போது படைத்தரப்பினர் வசமுள்ள  தனியார், அரச மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பிலும் அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்தினார்.

இதேவேளை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் அவர்கள், கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தி அதனூடாக துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

பிராந்திய நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயற்திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், மாவட்ட மேலதிக அரச அதிபர் சிறினிவாசன் மற்றும் மாகாண செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினரின் பிரச்சினைகள் தொடர்பில் சுமுகமான தீர்வு விரைவில் எட்டப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத்தினரின் பிரச்சினைகள் தொடர்பில் சுமுகமான தீர்வு விரைவில் எட்டப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனையில் இன்றையதினம் (03) இடம்பெற்ற வர்த்தக சங்கத்தினர் மற்றும் வடமாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி திணைக்கள செயலாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்தோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கென புதிய சந்தைக் கட்டிடத் தொகுதியொன்று ஜனாதிபதி அவர்களினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,  அங்கு வர்த்தக நிலையங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு துறைசார்ந்தோர் ஊடாக கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சும் ரமேஸ், கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன், உள்ளூராட்சி ஆணையாளர் ஜெகூ, ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment