Tuesday, December 11, 2012
இலங்கை::வடகடல் நிறுவனத்தினது செயற்திட்டங்கள் தொடர்பிலான மீளாய்வு கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் நடைபெற்றுள்ளது.
கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் மேற்படி விடயம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வடகடல் நிறுவனத்தின் கீழ் இயங்கிவரும் லுணுவில, வீரவில மற்றும் குருநகர் ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் மீன்வலை தொழிற்சாலைகளினது நடப்பாண்டு மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இதன்பிரகாரம் இந்திய அரசிடமிருந்து 21 மில்லியன் ரூபா கிடைக்கப்பெறவுள்ளதாகவும், அதனைக் கொண்டு நிறுவனத்தை மேம்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டுமெனத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், இலங்கை அரசிடமிருந்தும் 32 மில்லியன் ரூபா கிடைக்கப்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வடகடல் நிறுவனத்திற்காக ஒருதொகுதி தொழிற்துறை இயந்திரசாதனங்கள் இந்தியாவிலிருந்து கிடைக்கப பெற்றுள்ளதாகவும் மேலும் ஒருதொகுதி இயந்திரசாதனங்கள் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் இவற்றுடன் மூலப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கும் விரைவான நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும் இவற்றின் ஊடாகவே மேற்படி மூன்று மீன்வலைத்தொழிற்சாலைகள் ஊடாக தரமான உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் என்பது மட்டுமன்றி சிறந்த வருவாயையும் ஈட்ட முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மூன்று தொழிற்சாலைகளிலும் உற்பத்தி செய்யப்படும் மீன்பிடி வலைகளை தனியார் முகவர் ஊடாக விற்பனை செய்வதற்கும் குறிப்பிட்ட செயற்திட்டங்கள் யாவும் அடுத்தவருட முற்பகுதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் அவர்கள் துறைசார்ந்தோருக்கு பணிப்புரை விடுத்துள்ளதுடன், மூன்று தொழிற்சாலைகளினது தொழிற்துறை நடவடிக்கைகள் தொடர்பாகவும் துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது அமைச்சரின் ஆலோசகர் திருமதி வீ.ஜெகராஜசிங்கம், ஈ.பி.டி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா, அமைச்சின் மேலதிக செயலாளர்களான மங்கலிக்க மற்றும் சுசந்த டி சில்வா, வடகடல் நிறுவனத்தலைவர் பரந்தாமன் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.



No comments:
Post a Comment