Wednesday, December 12, 2012
இலங்கை::பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவானது பக்கச்சார்பாகவும் கௌரவமில்லாத முறையிலும் செயற்பட்டதாக சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டது.
கொழும்பு, தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்படி சங்கம் இவ்வாறு குறிப்பிட்டது. இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன கூறுகையில்,
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க நியாயமான கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு சாட்சிகள் யார் என்பதும் தடயப் பொருட்கள் எவை என்பது தொடர்பிலும் தெரியப்படுத்தப்பட வேண்டும். இந்த வாய்ப்புக்கள் பிரதம நீதியரசருக்கு வழங்கப்படவில்லை.
7அத்துடன், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய பிரதம நீதியரசருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அவரிடம் 1000 பக்கங்கள் கொண்ட குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணங்கள் கொடுக்கப்பட்டு 24 மணிநேரத்தில் பதிலளிக்க வேண்டுமென கூறப்பட்டது.
தெரிவுக்குழுவின் பெரும்பான்மை அங்கத்தவர்களின் வரைவு சிறுபான்மை அங்கத்தவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. தெரிவுக்குழுவிலிருந்து நான்கு அங்கத்தவர்கள் விலகினார்கள். இவர்களுக்கு பதிலாக வேறு நால்வர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், இங்கு அதுவும் நடைபெறவில்லை.
தெரிவுக்குழு அங்கத்தவர்கள், பிரதம நீதியரசரை மரியாதையின்றி நடத்தினார்கள். இதனால் தான் பிரதம நீதியரசர் விசாரணையிலிருந்து வெளிநடப்பு செய்தார். விசாரணை நடந்து 24 மணித்தியாலங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இது சுதந்திரமான நீதி முறைமையின் முதுகெலும்பை முறிக்கும்' என்றார்.
இங்கு கருத்துரைத்த ஜனாதிபதி சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா கூறுகையில், 'நாடாளுமன்றத்தில் நிலையியல் கட்டளையின் பிரிவு 78ஐ மீறியதும் நாடாளுமன்றத்தின் நியாயாதிக்கத்தை மீறியதுமான தெரிவுக்குழுவின் தீர்ப்பினை ஏற்க முடியாது.
உயர்நீதிமன்றம், டிசெம்பர் 13, 14ஆம் திகதிகளில் தெரிவுக்குழு பற்றிய தனது தீர்ப்பை வழங்கவுள்ளது. அரசாங்கமொன்றின் மூன்று அங்கங்களும் ஒன்றையொன்று மதிக்க வேண்டும். சட்டத்துறை நிறுவனங்கள் நீதித்துறையின் தீர்மானம் வரும்வரை பொறுத்திருக்க வேண்டும். அவசர முடிவுகள் பெறுமதி இல்லாதவை' என்றார்.
சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதற்காக மக்களின் சார்பில் சட்டத்தரணிகள் போராடுகின்றார்கள். நீதித்துறையின் கௌரவத்தை பாதுகாப்பதே இதன் நோக்கம்' என சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.சி.வெலியமுன கூறினார்.

No comments:
Post a Comment