Thursday, December 13, 2012

குஜராத் சட்டசபை முதல் கட்ட தேர்தல் : 87 தொகுதிகளில் விறுவிறு வாக்கு பதிவு!

Thursday, December 13, 2012
அகமதாபாத்::குஜராத் சட்டசபைக்கு முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. 87 தொகுதிகளில் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குஜராத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு, 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 87 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது. இதில் 46 பெண்கள் உள்பட 846 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல் கட்ட தேர்தலில் வாக்காளர்கள் எண்ணிக்கை 1.81 கோடி. இவர்களுக்காக 21 ஆயிரத்து 261 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு வாக்குப் திவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்தனர். 5 மணிக்கு வாக்கு பதிவு நிறைவடைகிறது. தேர்தல் நடக்கும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆளும் பாரதிய ஜனதா 87 தொகுதியிலும், காங்கிரஸ் 84 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. மோடியுடன் ஏற்பட மோதலால் பாஜவில் இருந்து விலகி, குஜராத் பரிவர்த்தன் கட்சியை தொடங்கிய முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல், இன்றைய தேர்தலில் முக்கிய வேட்பாளர் ஆவார். அவரது கட்சி 83 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. படேல் தவிர்த்து, சபாநாயகர் கண்பத் வாசவா, மாநில பாஜ தலைவர் பால்டு, மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, எதிர்க்கட்சி தலைவர் சக்திசின் கோகில், மாநில அமைச்சர்கள் வஜு வாலா, நரோதம் படேல், மங்குபாய் படேல், புருஷோத்தம் சோலங்கி, வசுபன் திரிவேதி, கனுபாய் பலாலா, மோகன் குந்தாரியா, ரஞ்சித் கிலிட்வாலா ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.

தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்டோர் குஜராத்தில் பிரசாரம் செய்து காங்கிரசுக்கு ஆதரவு திரட்டினர். பாஜ தரப்பில், முதல்வர் நரேந்திர மோடி, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். குஜராத்தில் 2 முறை தொடர்ச்சியாக முதல்வராக உள்ள மோடியே, மீண்டும் வெற்றி பெறுவார் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. மோடி, மணிநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். 17ம் தேதி நடக்கும் 2ம் கட்ட தேர்தலின் போது இங்கு வாக்குப் பதிவு நடக்கிறது. 2 கட்ட தேர்தலும் முடிந்த பின், வாக்குகள் 20ம் தேதி எண்ணப்படுகின்றன.

No comments:

Post a Comment