Wednesday, December 12, 2012

4 மாணவர்கள் பலி எதிரொலி படிக்கட்டில் பயணம் செய்த 10 பேரை பிடித்து அபராதம்!

Wednesday, December 12, 2012
சென்னை::திருப்போரூரில் இருந்து தி.நகருக்கு புறப்பட்ட மாநகர பஸ், கந்தன்சாவடி அருகே ரிவர்சில் வந்த லாரி மீது மோதியது. இதில் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியாயினர். இதுகுறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிந்து பஸ் டிரைவர் அசோக்குமார், கண்டக்டர் உதயகுமாரை கைது செய்தார். லாரி டிரைவரை பிடிக்க தனிப்படை ஆந்திரா விரைந்துள்ளது.

‘இந்த பகுதியில் பஸ்கள் தாறுமாக செல்கிறது. குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிறுத்துவதில்லை’ என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, நேற்று காலை பஸ்கள் அனைத்தும் குறிப்பிட்ட நிறுத்தத்தில் நின்று சென்றன. ஓஎம்ஆரில் உள்ள செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், பெருங்குடி, கந்தன்சாவடி ஆகிய பஸ் நிறுத்தங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பஸ் படிக்கட்டில் பயணம் செய்பவர்களை கண்டித்து உள்ளே செல்லும்படி அறிவுறுத்தினர். தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

இதுகுறித்து, சோழிங்கநல்லூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கட்ராஜ் கூறுகையில், ‘காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கனரக வாகனங்கள் செல்ல தடை உள்ளது. இன்று வந்த கனரக வாகனங்களை நிறுத்தி, தடை விதிக்கப்பட்ட நேரம் குறித்து டிரைவர்களுக்கு தெரியப்படுத்தினோம். நாளை (இன்று) முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள் ளோம். துரைப்பாக்கம் சிக்னல் அருகே மாநகர பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 10 பேரை பிடித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் அதற்கான அபராதத்தை செலுத்தும்படி கூறி அனுப்பினோம்’ என்றார்.

தலா ரூ.100 வசூலிக்கப்படும்

படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போக்குவரத்து சட்டத்தை முறையாக அமல்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் மற்றும் பயணிகளை கீழே இறக்கி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். பின்னர் அவர்களை நடமாடும் கோர்ட்டுக்கு அழைத்து சென்று அபராதம் விதிக்கப்படும். தலா ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும். இந்த சட்டத்தை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment