Thursday, December 6, 2012

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் : தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு!

Thursday, December 06, 2012
சென்னை::பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று பாபர் மசூதி இடிப்பு தினம். இதையொட்டி தீவிரவாத தாக்குதல் மற்றும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் ரயில், பஸ் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பஸ், ரயில் மற்றும் விமான நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை மீனாட்சி, பழநி முருகன், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி ராமானுஜம், மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். சென்னையிலும் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதையடுத்து, சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர். முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சந்தேக நபர்களின் நடமாட்டம் ஏதேனும் இருந்தால் உடனடியாக காவல் துறை கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தண்டவாள பகுதிகள், பாலங்கள், அலுவலகங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் தவிர கூடுதலாக 3000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்ட்ரல் துணை கோட்டத்தில் 600 பேர், எழும்பூர் துணை கோட்டத்தில் 300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். உடைமைகளும் நவீன இயந்திரங்கள் மூலம் சோதனை செய்யப்படுகின்றன. இந்த சோதனைகளால் நெரிசலான காலை, மாலை நேரங்களில் பயணிகள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது. அதிகாரிகளும் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கெடுபிடிகள் நாளை இரவு வரை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment