Monday,November 05, 2012
சென்னை::டீசல் விலை உயர்வால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை ஈடுகட்ட வேண்டுமென்றால் பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ள முதல்வர் ஜெயலலிதா, இருப்பினும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டினை அரசே ஏற்கும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், சாலைப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, மோசமான நிலைமையில் இருந்த அரசுப் போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தும் வகையில், போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி உதவி அளித்தல், புதிய பேருந்துகளை வாங்குதல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல் போன்ற பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அரசின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையடுத்து, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முன்னேற்றப் பாதையில் செல்வதுடன், திறமையான, இடர்பாடற்ற மற்றும் பாதுகாப்பான சேவையை பொதுமக்களுக்கு அளித்து வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், செப்டம்பர் 14 முதல் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதன் காரணமாக, லிட்டர் ஒன்றுக்கு ரூ.43.91 காசு என்றிருந்த டீசல் விலை ரூ.49.98 காசாக உயர்ந்தது. அதாவது, ஒரு லிட்டர் டீசலின் விலை 6 ரூபாய் 7 காசு என்ற அளவிற்கு உயர்ந்தது. இந்த டீசல் விலை உயர்வு காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 5.24 கோடி லிட்டர் டீசலை எரிபொருளாக பயன்படுத்துகின்றன.
செப்டம்பர் 14 முதல் மத்திய அரசு டீசல் விலையை உயர்த்துவதற்கு முன்பு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மாதாந்திர எரிபொருள் செலவினம் ரூ.230 கோடியே 8 லட்சம் என்ற அளவில் இருந்தது. டீசல் விலை உயர்விற்குப் பிறகு, எரிபொருளுக்கான மாதாந்திர செலவினம் ரூ.261 கோடியே 90 லட்சம் உயர்ந்துவிட்டது. அதாவது, டீசல் விலை உயர்வினால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.31 கோடியே 82 லட்சம் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த டீசல் விலை உயர்வு காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டொன்றிற்கு ரூ.381 கோடியே 81 லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 2012-13ம் நிதியாண்டில் மட்டும், அதாவது செப்.,14 முதல் மார்ச் 31, 2013 வரையிலான காலத்திற்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக ரூ.206 கோடியே 83 லட்சம் செலவு ஏற்படும். இந்த இழப்பீட்டை ஈடுகட்ட வேண்டுமென்றால், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டும்.
இருப்பினும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அதே சமயத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டினை ஈடு செய்யும் வகையிலும், இந்தக் கூடுதல் செலவை அரசே ஏற்க முடிவு செய்துள்ளது. இதற்கென ரூ.200 கோடி முதல் துணை மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நவம்வர் 2ம் தேதியன்று சட்டமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment