Friday, November 02, 2012
சென்னை:தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்க்கு, சென்னை ஐகோர்ட், நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது.
சென்னை, மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்தில், பாலசுப்ரமணியன் என்ற நிருபர், புகார் அளித்தார். அதில், "கடந்த, 27ம் தேதி, விமான நிலையத்துக்குள், விஜயகாந்த் வரும் போது, அவரிடம் கேள்வி கேட்க முற்பட்டேன்; அதனால், கோபமடைந்து, அவரும், அவருடன் வந்தவர்களும், நிருபர்களை திட்டினர்; என்னை கீழே தள்ளினர்' என, கூறியுள்ளார். இதையடுத்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் எம்.எல்.ஏ., அனகை முருகேசனுக்கு எதிராக, மீனம்பாக்கம் போலீசார், வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில், முன்ஜாமின் கோரி, விஜயகாந்த், அனகை முருகேசன், தனித்தனியே மனு தாக்கல் செய்தனர். இதற்கிடையில், அனகை முருகேசன், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
விஜயகாந்த் தாக்கல் செய்த, முன் ஜாமின் மனு, நேற்று, நீதிபதி ராஜேந்திரன், முன், விசாரணைக்கு வந்தது. அவர் சார்பில், வழக்கறிஞர்கள் குமரேசன், பாபுமுருகவேல், நமோ நாராயணன் ஆகியோரும், போலீஸ் தரப்பில், அட்வகேட் - ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு வழக்கறிஞர் அய்யப்பராஜ் ஆஜராகினர்.
வழக்கறிஞர் குமரேசன், ""மதுரைக்கு செல்வதற்காக, விமான நிலையத்துக்கு, அவசரமாக விஜயகாந்த் வந்தார். அவரை, நிருபர் ஒருவர் வழி மறித்தார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நிருபரை, விஜயகாந்த் தொடவில்லை. அவரை தாக்க வேண்டும் என்கிற உள்நோக்கம் அவருக்கு இல்லை,'' என்றார்.
அட்வகேட் - ஜெனரல் நவநீதகிருஷ்ணன், ""குற்றம் புரிவதை, விஜயகாந்த் வழக்கமாக கொண்டுள்ளார். அவரது கட்சியினரையும், வேட்பாளரையுமே, அடித்துள்ளார். சட்டசபையில் இருந்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியவில்லை,'' என்றார்.
இதையடுத்து, விஜயகாந்த்க்கு, முன்ஜாமின் வழங்கி, நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
""சாட்சிகளை கலைக்கக் கூடாது; சம்மன் அனுப்பினால், ஆஜராக வேண்டும்; விசாரணைக்கு தேவைப்படும் போது, ஆஜராக வேண்டும்,'' என, நீதிபதி ராஜேந்திரன், நிபந்தனைகள் விதித்தார். அனகை முருகேசனின், முன் ஜாமின் மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்தார்.

No comments:
Post a Comment