Sunday, November 04, 2012
இலங்கை::மட்டக்களப்பில் சட்டவிரோத ஆயுதங்களை கையளிக்குமாறும் அதற்கு சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயுதங்களை வைத்திருப்போர் அல்லது ஆயுதங்களை தமது வதிவிடங்களில் கண்டோர் அது தொடர்பில் அருகில் உள்ள படை முகாம்களிலோ அல்லது பொலிஸ் நிலையங்களிலோ தெரியப்படுத்தி வெகுமதிகளைப் பெற்றுச் செல்லுமாறு துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு நகரின் பல்வேறு இடங்களில் இந்த துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. துப்பாக்கிகளையோ, துப்பாக்கிகளின் உதிரிப் பாகங்களையோ, பிற வெடி பொருட்களையோ வைத்திருப்பது சட்டவிரோதமாகும்.
அவ்வாறானவர்கள் கண்டறியப்பட்டால் பிணையில் வரமுடியாத தடுப்புக்காவல் வழங்கப்படும். இதன் காரணமாக தடுப்பில் இருப்பவரின் குடும்பம் வாழ வழியின்றி தவிக்கும் நிலையேற்படும்.
ஆகவே நீங்கள் கண்டெடுத்த துப்பாக்கிகளையோ அல்லது ஏதேனும் ஆயுத உபகரணங்கள் உங்கள் வசம் இருந்தால் அல்லது உங்கள் வதிவிடத்தில் எங்காவது கண்டிருந்தால் அருகில் உள்ள பாதுகாப்பு படைமுகாமுக்கோ அல்லது பொலிஸ் நிலையத்துக்கோ தெரியப்படுத்தி அதற்குரிய வெகுமதிகளை பெற்றுச் செல்லுங்கள்.
ஆயுதங்கள் தொடர்பிலான தகவல்கள் வழங்கினால் அவற்றை பாதுகாப்பு படையினர் கவனமாக அகற்றுவர் என சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கண்டெடுக்கும் ஆயுதங்களுக்கான வெகுமதித் தொகைகள் மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆனால் இது யாரால் வெளியிடப்பட்டது. யார் இதற்கு உரிமை கோருகின்றனர் என்ற எதுவித விளக்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

No comments:
Post a Comment