Saturday, November 03, 2012
சென்னை::டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கை: மக்களை இணைப்பது மட்டுமல்லாமல், மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் இன்றியமையாததாக விளங்குவது சாலை போக்குவரத்து. இதில் அரசு போக்குவரத்து கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. கடந்த செப்டம்பர் 14-ம் தேதி முதல் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது.
இதன் காரணமாக, லிட்டர் ஒன்றுக்கு 43 ரூபாய் 91 காசு என்றிருந்த டீசல் விலை 49 ரூபாய் 98 காசாக உயர்ந்தது. இந்த விலை உயர்வு காரணமாக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் 5.24 கோடி லிட்டர் டீசலை பயன்படுத்துகின்றன. டீசல் விலை உயர்வுக்கு முன்பு அரசு போக்குவரத்து கழகங்களின் மாதாந்திர எரிபொருள் செலவு ரூ.230.08 கோடி என்ற அளவில் இருந்தது. இது, தற்போது ரூ.261.90 கோடியாக உயர்ந்துவிட்டது. டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.31.82 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.381.81 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 14 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதலாக ரூ.206.83 கோடி செலவு ஏற்படும். இந்த இழப்பீட்டை ஈடுகட்ட அரசு போக்குவரத்து கழகங்கள் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும். இருப்பினும், பொதுமக்களின் நலனை கருதியும், அதே நேரத்தில் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை ஈடு செய்யும் வகையிலும், இந்த கூடுதல் செலவை அரசே ஏற்க முடிவு செய்துள்ளது. இதற்கென 200 கோடி ரூபாய் முதல் துணை மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சட்டசபையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:
Post a Comment