Saturday, November 03, 2012
மதுரை::இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க முப்படை பாதுகாப்பு வழங்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த மதுரை ஐகோர்ட் கிளை, "நிரூபிக்கத்தக்க ஆதாரங்கள் எதையும், மனுதாரர்கள் தாக்கல் செய்யவில்லை. இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தில், கோர்ட் தலையிட முடியாது. இது வெளிநாட்டு விவகாரம்' என குறிப்பிட்டது.
மதுரை வக்கீல்கள் கண்ணன், வாஞ்சிநாதன், ஸ்டாலின் ஆகியோர் தாக்கல் செய்த மனு:
வரலாற்று ரீதியாக கச்சத்தீவு கடல் பகுதியை, இந்தியாவின் இயற்கையான ஒரு பகுதியாக முடிவு செய்ய வேண்டும். ஒப்பந்தப்படி, இந்திய கடல் எல்லையில் மிதவைகள் மிதக்க விட வேண்டும். இந்திய மீனவர்கள் பாதுகாப்பை கருதி, அவர்களுக்கு துப்பாக்கிகள் வழங்க வேண்டும். இந்திய-இலங்கை கடல் எல்லையில் மீனவர்களுக்கு இந்திய கப்பல்படை, கடலோர காவல்படை, விமானப்படை பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும், என கோரினர்.
தமிழக மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனு: ராமேஸ்வரம் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் பவளப்பாறைகள், கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் உள்ளன. அங்கு மீன்பிடிப்பது பற்றி, சில ஒழுங்குமுறைகளை விதித்து, தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதை இயந்திரப்படகுகள் மூலம் மீன்பிடிப்பவர்கள், பின்பற்றுவதில்லை; மீன்கள் அழிகின்றன. அதிக குதிரை சக்தி திறன் கொண்ட இயந்திரப்படகுகள், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், என குறிப்பிட்டார்.
இதை விசாரித்த நீதிபதிகள் வினோத் கே.சர்மா, ஏ.செல்வம் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
மீனவர்கள் தாக்கப்பட்டதில் 500 பேர் பலியாகியுள்ளனர். 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படைக்கு சோமாலியா கடற்கொள்ளையர்களுடன் தொடர்பு உள்ளது. கச்சத்தீவு, வாலி தீவை 1976 ல் இலங்கைக்கு தாரை வார்த்ததுதான் பிரச்னைக்கு காரணம் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லை ஒப்பந்தப்படி ஒரு நாட்டின் கடல் எல்லைக்குள், பிற நாட்டு மீனவர்கள் புகுந்து மீன் பிடிக்க முடியாது. மீனவர்களை பாதுகாக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதில், கோர்ட் தலையிட்டு இந்திய விமானப்படை, கப்பல்படையை நிறுத்துமாறு உத்தரவிட முடியாது. இந்திய கடல் எல்லைக்குள், இலங்கை கடற்படை ஊடுருவுவதாக கூறுகின்றனர். இப்பிரச்னையில், மத்திய அரசு தனது கொள்கை முடிவுப்படி தீர்வு காணலாம். தமிழக மீனவர்கள் அப்பாவிகள். அவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வேண்டும் என்பதை ஏற்க முடியாது.
ஒரு நாட்டின் கடல் எல்லைக்குள் வரும் கப்பல்களால், அதனுடைய சுதந்திரம் மற்றும் எல்லைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதினால், அந்நாடு தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். நிரூபிக்கத்தக்க ஆதாரங்கள் எதையும், மனுதாரர்கள் தாக்கல் செய்யவில்லை. இது, இக்கோர்ட் எல்லைக்கு உட்பட்டதல்ல. இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தில், கோர்ட் தலையிட முடியாது.இது வெளிநாட்டு விவகாரம்.
கடலோர காவல்படை துணை இயக்குனர்," மீனவர்களுக்கு 126 "டிரான்ஸ் மீட்டர்கள்' வழங்கப்பட்டுள்ளது. கடல் எல்லை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஜி.பி.எஸ்.,கருவிகள் வழங்கப்படும்,' என தெரிவித்துள்ளார்.தமிழக அரசு,"மீன் பிடிக்க டோக்கன்கள் வழங்கப்படுகிறது. 12 போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் நலனுக்கு பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்படுள்ளது,' என தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து மீனவர்களுக்கு "பயோமெட்ரிக்' அடையாள அட்டைகள் வழங்க முடிவு செய்துள்ளன. "அதிக குதிரை சக்தி திறன் கொண்ட இயந்திரப்படகுகள், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த தடை விதிக்க உத்தரவிட வேண்டும்' என கோரும் மற்றொரு மனுதாரர், முதலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்திருக்க வேண்டும். நடவடிக்கை இல்லை எனில், கோர்ட்டிற்கு வந்திருக்கலாம். அனைத்து மனுக்களும் விசாரணைக்கு தகுந்தவை அல்ல. அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது, என்றனர்.

No comments:
Post a Comment