Monday, October 29, 2012
இலங்கை::கடல்கடந்த நாடுகளிலிருந்து செயற்படும் சில புலி உறுப்பினர்களின் சட்டவிரோதமான செயற்பாடுகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகிறது' என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற போது புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். சில உறுப்பினர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். அவர்களே நிதி திரட்டல், பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டவிரோதமான செயற்பாடுகளில் கடல்கடந்த நாடுகளிலிருந்து செயற்பட்டு வருகின்றனர்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்ற இளம் தலைவர்கள் சங்கத்தின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முயற்சித்தார். இதன்பிரகாரம் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன.
இருப்பினும், புலிகள் இயக்கத்தினர் யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறி மக்கள் மீது கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்டனர்.
எனினும், மனிதாபிமான நடவடிக்கையினை வெற்றிகரமாக முன்னெடுத்த அரசாங்கம், இடம்பெயர்ந்த மூன்று இலட்சம் மக்களின் நலன்புரி விடயத்தில் கவனத்தைச் செலுத்தி அவர்களை மீள்குடியேற்றம் செய்துள்ளது.
அத்துடன், ஐயாயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளையும் அகற்றியுள்ளது. புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர்.
பலமான தலைமைத்துவம், மக்களின் ஆதரவு, சிறந்த திட்டமிடல், தெளிவான திட்டம் உயர்தர தொழில் தகைமைகளைக் கொண்ட படை அதிகாரிகள் வெளிநாடுகளில் பெற்றுக்கொண்ட பயிற்சி மற்றும் அனுபவத்தின் மூலமாகவே இந்த மனிதாபிமான நடவடிக்கையை சிறந்த முறையில் முன்னெடுக்க முடிந்தது.
இந்நிலையில், புலம்பெயர் தமிழர்கள் முறைகேடான நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் மனிதக் கடத்தல்களை மேற்கொண்டு இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருகின்றது.
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலரினால் மேற்கொள்ளப்படும் அந்த சட்டவிரோதமான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு அரசாங்கம் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறது....
எம்மை வெற்றியை நோக்கி நகர்த்தியது உறுதியான தலைமைத்துவம்-பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ!
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்கள், கொழும்பிலுள்ள சர்வதேச உறவுகள் மற்றும் செயல்திட்ட ஆய்வுகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் நேற்று இடம்பெற்ற இளம் தலைவர்கள் அமைப்பின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார்.
இளம் தலைவர்கள் அமைப்பானது 1950இல் நிவ்யோக்கில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது சர்வதேச ரீதியில் இயங்கி வருகின்றது. இவ் அமைப்பில் 120 நாடுகளை சேர்ந்த 20,000க்கு மேற்பட்ட வர்த்தகத் தலைவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இங்கு உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், இலங்கையானது கொடூர பயங்கரவாதத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்டு இருந்தது. 2005இல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உறுதியான தலைமைத்துவத்தின் கீழ், முன்பிருந்த அரசாங்கத்தால் இல்லாதொழிக்க முடியாமல் இருந்த கொடூர பயங்கரவாதம் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டது என தெரிவித்தார்.
வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளை தொடர்ந்து, மிகப் பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருந்தது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த 300,000 க்கு மேற்பட்ட மக்கள், 5000 கிலோமீற்றர் பரப்பில் புதைக்கபட்டிருந்த மிதிவெடிகள், முன்னாள் புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு போன்றவற்றை அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவு செய்து வருகின்றது எனவும் தெரிவித்தார்.
இதைத்தவிர பல நலன்புரித்திட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களுக்காக முன்னெடுக்கப்படுவதாகவும், 78,000 மேற்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்புகளும் பெறப்பட்டுள்ளதாகவும், மேலும் பல உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி உட்பட பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் மீள்நிர்மாணம், மீள்குடியமர்வு, புனர்வாழ்வு மற்றும் மீள் ஒன்றிணைப்பு போன்ற செயற்பாடுகள் மூலம் தேசிய நல்லிணக்கம் வளர்க்கப்படுவதாகவும், தற்போது பொலிஸ் பிரிவினரால் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இராணுவத்தினர் அரசாங்கம் அபிவிருத்தி நடவடிக்கைகளில் கூடுதலாக ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பேராசரியர் ரஜீவ விஜயசிங்க ஆகியோரால் கல்விசார் செயலமர்வு நிகழ்தப்பட்டது. இதில் இளம் தலைவர்கள் அமைப்பின் உறுப்பினர்களும், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.



No comments:
Post a Comment