Sunday, October 28, 2012
புதுடெல்லி::மத்திய அமைச்சர்களாக மொத்தம் 22 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். கேபினட் அமைச்சர்களாக 7 பேரும், சிரஞ்சீவி மற்றும் மணீஷ் திவாரி ஆகியோர் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும் சசி தரூர் உள்ளிட்ட 13 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர். ராஷ்டிரபதி பவனில் இன்று காலை நடந்த விழாவில் அவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நாடாளுமன்ற தேர்தல் 2014ம் ஆண்டு நடக்க உள்ளது. இந்த தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் ஆட்சியை பிடிக்க பல்வேறு அதிரடி மாற்றங்களில் காங்கிரஸ் கட்சி இறங்கி உள்ளது. அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, அன்னிய நேரடி முதலீடு பிரச்னை, சுரங்க துறை ஊழல் என சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பல அமைச்சர் பதவிகள் காலியாக உள்ளன. இதனால் சில அமைச்சர்கள் பல பொறுப்புகளை வகித்து வருகின்றனர். அரசு நிர்வாகத்தை திறம்பட நடத்த முடியாத நிலையில், அமைச்சரவையை மாற்றி அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்தார்.
மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் விலக்கி கொண்டதால், அந்த கட்சியை சேர்ந்த 6 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அறிவியல், தொழில்நுட்ப துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் உடல்நலக் குறைவு காரணமாக இறந்தார். தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷியும் உடல்நலக் குறைவால் அமைச்சரவையில் இருந்து விலகினார். திமுகவை சேர்ந்த 2 அமைச்சர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளனர். இந்த இடங்களில் புதிய அமைச்சர்களை நியமிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், மன்மோகன் சிங் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் காலை 11.30 மணிக்கு நடந்த பதவியேற்பு விழா நடந்தது. இதில் துணை ஜனாதிபதி அன்சாரி, பிரதமர் மன்மோகன், காங்கிரஸ் தலைவர் சோனியா, அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். கே.ரகுமான் மாலிக் (சிறுபான்மையினர் நலம்), தின்ஷா படேல், அஜய் மாக்கென், பல்லம் ராஜு, அஷ்வினி குமார் (சட்டம்), ஹரீஷ் ராவத், சந்திரேஷ் குமாரி ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். சிரஞ்சீவி, மனீஷ் திவாரி ஆகிய இருவரும் தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். சசி தரூர், தாரிக் அன்வர், கே.சுரேஷ், கே.ஜெயசூரிய பிரகாச ரெட்டி, ஏ.எச்.கான் சவுத்ரி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராணி நாரா, எஸ்.சத்யநாராயணா, நினாங் எரிங், தீபா தாஸ்முன்ஷி, பல்ராம் நாயக், கிள்ளி குப்பா ராணி, லால்சந்த் கட்டாரியா ஆகிய 13 பேர் இணை அமைச்சர்களாக பதவியேற்றனர். காங்கிரஸ் தேசிய பொது செயலாளர் ராகுல் காந்தி, தமிழகத்தை சேர்ந்த மீனாட்சி நடராஜன், மாணிக் தாகூர் உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், பட்டியலில் அவர்களது பெயர் இடம்பெறவில்லை.

No comments:
Post a Comment