Friday, October 05, 2012
சென்னை::மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பொடா சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: என்மீது 2003ல் பொடா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் எனக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனையில் எனது பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன்.
இந்த மாதம் இங்கிலாந்தில் விரேந்திர சர்மா என்பவர் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்துள்ளது.
அதில் நானும் எனது மனைவியும் கலந்துகொள்கிறோம். எனவே, அக்டோபர் 10 முதல் அக்டோபர் 28வரை நான் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும். எனது பாஸ்போர்ட்டை தருமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு 6வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி கலியமூர்த்தி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகோவுக்கு பாஸ் போர்ட் தருவதற்கு ஆட்சேபனை இல்லை என்று அரசுத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: அரசுத் தரப்பில் ஆட்சேபனை இல்லை என்று தாக்கல் செய்த மனு பதிவு செய்யப்படுகிறது. மனுதாரர் வைகோ ஏற்கனவே பாஸ்போர்ட் கேட்டு மனு தாக்கல் செய்து பாஸ்போர்ட்டை பெற்றுள்ளார். வெளிநாடு சென்று திரும்பி வந்தவுடன் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சரண்டர் செய்துள்ளார். எனவே, அவரின் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த முறையும் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்

No comments:
Post a Comment