Wednesday, October 3, 2012

காந்தி சிலைக்கு மலர் தூவி ஆளுநர், முதல்வர் மரியாதை

Wednesday, October 03, 2012
சென்னை:அண்ணல் காந்தியடிகளின் 144 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர், முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். காந்தியடிகளின் 144வது பிறந்த நாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை மலர் களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இங்கு, முதல்வர் ஜெயலலிதா காலை 9.55 மணிக்கு வந்தார். இதையடுத்து ஆளுநர் ரோசய்யா வந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து முதல்வர் வரவேற்றார்.

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தி படத்துக்கு அவர்கள் இருவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர்கள் மலர் தூவினர். காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சென்னை சர்வோதயா சங்கத்தை சேர்ந்தவர்கள் காந்திய பாடல்களை பாடினர். அமைச்சர்கள், தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தீண்டாமை ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காந்தி சிலை அருகிலிருந்து சைக்கிள் பேரணி நடந்தது. செய்தித்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார். கிண்டி காந்தி மண்டபத்தில் காந்தி வாழ்க்கை வரலாற்றை விளக்கிடும் கண்காட்சியையும் அவர் தொடக்கி வைத்தார்.



விழாவுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா தலைமை வகித்தார். பின்னர், காந்தி பிறந்தநாள் விழா பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் ரோசய்யா பரிசு வழங்கினார். கண்காட்சி இன்றும் நடக்கிறது. அரசு துறைகள், பிற நிறுவனங்கள் பங்கேற்கும் புகைப்படம், கைவினைப் பொருட்கள் கண்காட்சியும் நடைபெறுகிறது. இன்று இரவு 7 மணிக்கு காந்தி பற்றி சிறப்பு படம் காட்டப்படுகிறது. கிண்டியில் உள்ள காந்தி நினைவு மண்டபம், தியாகிகள் மண்டபம் ஆகியவை மின் விளக்கு களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment