Friday, October 5, 2012

பாதுகாப்பு விசா மறுக்கப்படுவது சட்ட விரோதம் - அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

Friday, October 05, 2012
பாதுகாப்பு விசா வழங்கப்பட்ட நிலையிலும் விலாவுட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவருக்கு எதிரான ஏசியோ எனப்படும் பாதுகாப்பு புலனாய்வுத் தரப்பின் தடை செல்லுபடியற்றது என்று அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தினால் நேர்மையான அகதி என அங்கீகரிக்கப்பட்டு, பாதுகாப்பு வீசா வழங்கப்பட்ட நிலையிலும் கடந்த மூன்று வருடங்காளாக அவர் விலாவுட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
36 வயதான யோகசந்திரன் ராஹவன் என்ற அவர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் என்று அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு புலனாய்வு தரப்பினர், தெரிவித்து வந்தததாலேயே அவர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதனால் அவரது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் ஏசியோவுக்கு எதிராக அவரது சட்டத்தரணி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கு இன்று அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் ஏற்கனவே முன்மொழியப்பட்ட அகதிகளை மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான திட்டத்தை சட்ட ரீதியற்றது என்று அறிவித்த நீதிபதியான டேவிட் மேன் இந்த வழக்கை விசாரணை செய்தார்.
குறித்த இலங்கையருக்கு பாதுகாப்பு வீசா மறுக்கப்படுவதானது நீதிமன்ற சட்டத்துக்கு முரணானது என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
ஏசியோ எனப்படும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வுத் தரப்பின் அறிவுறுத்தலின் படி, அரசாங்கத்தினால் காரணங்கள் கூறப்படாமல் அகதி ஒருவரை நீண்டகாலத்துக்கு தடுத்து வைக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நீதிமன்றத்தின் ஆலோசனை இன்றி ஒருவருக்கு பாதுகாப்பு வீசா வழங்கப்படுவதை தவிர்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இலங்கையில் இருந்து சென்ற 55 பேர் இவ்வாறு காரணங்கள் இன்றி அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வுத் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக த சிட்டினி மோர்னிங் ஹெரால்ட்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் 55க்கும் அதிகமான இலங்கையர்கள் இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக சிட்னி பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டத்துறை விரிவுரையாளர் பென் சாவோல் தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணங்கள் அற்ற வகையில் அகதிகளை அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வுத் தரப்பினர் தடுதது வைத்துள்ளமையே காரணமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு தரப்பின் இறைமை தொடர்பில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவுஸ்திரேலியா செல்லும் அகதிகளை அவர்கள் சாகும் வரையில் நிறந்தரமாக தடுத்து வைப்பதே அவுஸ்திரேலியாவின் அகதிக் கொள்கையாக அமைந்திருப்பதாக, சிட்னி மோர்னிங் ஹெரால்ட் குற்றம் சுமத்தியுள்ளது.

No comments:

Post a Comment