Friday, October 5, 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு நன்மை தரும் விடயங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் - பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ!

Friday, October 05, 2012
இலங்கை::தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு நன்மை தரும் விடயங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். தவிர அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சிக்கக் கூடாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் 15ஆவது பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

பத்தரமுல்லையிலுள்ள அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற இம்மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

'அரசாங்கம் முன்வைத்துள்ள திவிநெகும சட்டமூலத்தை பற்றி பூரண அறிவை பெற்றிராதவர்கள் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் இந்த திட்டத்தினையும் எதிர்த்து வருகின்றனர். இந்த திவிநெகும சட்டமூலத்தில் சமுர்த்தி அதிகாரசபையும் உள்வாங்கப்பட்டுள்ளது.

திவிநெகும திணைக்களம் அமைப்பதன் மூலம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் பெறும் அனைத்து சலுகைகளையும் நன்மைகளையும் பெற்றுக்கொள்வார்கள். இதன் மூலம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நிரந்தர ஓய்வூதிய உத்தியோகத்தர்களாக மாறுகின்றனர்.

இந்த திவிநெகு திணைக்களத்தின் மூலம் வறிய மக்கள் நன்மை பெறக் கூடிய அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 2005, 2010ஆம் ஆண்டுகளினுடைய மஹிந்த சிந்தனை வேலைத்தட்டத்தின் கீழ் சமுர்த்தி திட்டம் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனுடாக மக்கள் சிறந்த பயன்களை அடைந்து வருகின்றனர். ஆனால் இன்று நல்லவற்றையும் தீயவைகளாக எதிர்த்து வரும் சில தீய சக்திகள் இந்த நன்மையளிக்க கூடிய திவிநெகும தி;ட்டத்தினை எதிர்த்ததன் காரணமாக இந்த சட்டமூலம் நிறைவேற்றம் சற்று பின்தள்ளப்பட்டுள்ளது.

எனினும் இந்த திவிநெகும சட்டமூலத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கையிலுள்ள அனைத்து மாகாண சபைகளும் முழு ஆரவினை வழங்கியுள்ளன.

இதனால் மிக விரைவில் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டு சமுர்த்தி உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் நன்மை பெறுவார்கள்' என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் சங்கத்தின் தலைவர் கித்சிறி கமகே, பொதுச் செயலாளரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஏ.டி.ஜகத்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment