Wednesday, October 31, 2012

அமெரிக்காவை துவம்சம் செய்த ‘சாண்டி’ புயல் : பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு!

Wednesday, October 31, 2012
நியூயார்க்::அமெரிக்காவில் ‘சாண்டி’ புயல் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. கரீபியன் கடலில் உருவான சாண்டி புயல், நேற்று அதிகாலை அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதியை தாக்கியது. பலத்த மழையுடன் சூறை காற்று சுழன்றடித்ததால் நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட கிழக்கு மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. போக்குவரத்து, தொலைதொடர்பு வசதிகள் முடங்கின. புயலால் கடல் அலைகள் பொங்கி கடற்கரையோர நகரங்களை பதம் பார்த்தது. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. கிழக்கு மாநிலங்களில் புயல் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. நியூயார்க் நகரில் மட்டும் 18 பேர் இறந்துள்ளனர். பல பகுதிகளில் மரங்கள் வேரோடு பிய்த்து கொண்டு சரிந்தன.

இவை மின்சார லைன்கள் மீது விழுந்ததால் மின்சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. 80 லட்சம் வீடுகள், வியாபார நிறுவனங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மின்சேவையை சரிசெய்யும் பணியில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சாண்டி புயலால் பாதிப்புக்கு ஆளான கிழக்கு கடற்கரை நகரங்களான வாஷிங்டன், பிலடெல்பியா, பாஸ்டன் நகரங்களில் இன்றைக்குள் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என தெரிகிறது. நியூயார்க் நகரம் மற்றும் நியூஜெர்சி மாநிலத்தில் பல பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதால் அங்கு இயல்பு நிலை திரும்ப பல நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. அமெரிக்காவில் வரும் 6-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேர்தலுக்குள் வாக்கு சாவடிகளை அமைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒட்டுமொத்த நாட்டையும் புயல், சோகத்தில் ஆழ்த்திவிட்டதாக கூறியுள்ள அதிபர் ஒபாமா, இன்று புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளார்.

No comments:

Post a Comment